யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-08-29

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 4:1-2,6-8,பதிலுரைப்பாடல்: திபா. 15:2-5,திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 1:17-18,21-22,27,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8,14-15,21-23)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

தூய்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு தேவையற்ற மனித மரபுகளில் இருந்து விலகி கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூயவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனித உள்ளத்தின் விளைவுகளாகிய கொலை, விபச்சாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல்களில் இருந்து விலகி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கு தந்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளைப் பின்பற்றி வாழுமாறு ஆண்டவர் நம்மைத் தூண்டுகிறார். உடலின் தூய்மையை விட உள்ளத்தின் தூய்மையையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என் பதை இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார். நம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் தூய எண்ணம் கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 4:1-2,6-8

இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
பதிலுரைப்பாடல்: திபா. 15:2-5

மாசற்றவராய் நடப்போரே! -இன்னோர் நேரியவற்றைச் செய்வர்: உளமார உண்மை பேசுபவர்: தம் நாவினால் குறங்கூறார்: பல்லவி

தம் தோழருக்குத் தீங்கிழையார்: தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்: ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்: பல்லவி

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்: மாசற்றவருக்கு எதிராகக் கைய+ட்டுப் பெறார்: -இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இறைவார்த்தையின் படி நடக்கிறவர்களாய் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 1:17-18,21-22,27

சகோதரர் சகோதரிகளே, நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை: அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல.தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.எனவே எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லதுஇறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8,14-15,21-23

ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் ய10தர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை:சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? " என்று கேட்டனர். அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். "இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் " என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் " என்று அவர்களிடம் கூறினார். இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மீட்பின் ஊற்றாம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்த தூய வாழ்வு வாழவும், மக்கள் அனைவருக்கும் மீட்பின் கருவிகளாகத் திகழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வரங்களின் வள்ளலாம் இறைவா,

கொலை, விபச்சாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல் களின் பிடியில் சிக்கித் தவிப்போர் அனைவரும், உமது அருளால் நன்மைத்தனத்திற்குரிய தூய எண்ணங்களைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தூய்மையின் நிறைவாம் இறைவா,

இயேசுவின் கட்டளைகளுக்கு ஏற்ப மனித மரபுகளிலிருந்து விலகி, உம்மையும் பிறரையும் அன்பு செய்து தூயவர்களாய் வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோ தரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் அரசராம் இறைவா,

தீராத நோய்கள், கடன் தொல்லைகள், மன வேதனைகள், பிரச்சனைகள் போன்றவற்றில் சிக்கித் தவிப்போர் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உம் இரக்கத்தால் அவற்றில் இருந்து விடுதலை பெற்று, வாழ்கின்ற உண்மை கடவுள் நீரே என்பதை அறிக்கையிடவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

காலங்களைக் கடந்த எம் இறைவா!

நீர் படைத்த வளங்கள் நிறைந்த இவ்வுலகில் வாழ்வது கொஞ்கக்காலம் என்று, பேராசையால் தானே எல்லாவற்றையும் அனுபவிக்காமல் உலகின் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினருக்கும் விட்டுக்கொடுத்து வாழவும், இவற்றின் வளங்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள நல்ல ஞானத்தை தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வின் ஊற்றாம் இறைவா,

இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

குணமளிக்கும் மருத்துவரே இறைவா,

பெரும் தொற்றுநோயால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் உலக மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று எசாயா எழுதியுள்ளார் என்றார்'' (மாற்கு 7:6-7)

எசாயா இறைவாக்கினரின் கூற்றை (காண்க: எசா 29:13) மேற்கோள் காட்டி இயேசு ஓர் அடிப்படையான உண்மையைப் போதிக்கின்றார். நம் வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள் நம் உள்ளத்தில் மறைந்திருக்கின்ற எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது சரியல்ல. அதுபோலவே, சொற்களால் கடவுளைப் போற்றிவிட்டு, செயல்களால் அவரைப் பழித்தால் அதுவும் ஒரு பெரிய முரண்பாட்டைத்தான் காட்டுகிறது. யூத சமய வழக்கங்களை நன்கு அறிந்திருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்டதை இயேசு கண்டிக்கிறார். கடவுளிடமிருந்து வந்த கட்டளைகளைக் கருத்தாகக் கடைப்பிடிப்பதற்கு மாறாக, அவர்கள் ''மனித கட்டளைகளை'' (''மூதாதையர் மரபு'') உயர்த்திப்பிடித்தனர். இத்தகைய மரபுகளின் நோக்கம் கடவுளின் கட்டளைகளை மக்கள் கடைப்பிடிக்க உதவுவதுதான். ஆனால் நடைமுறையிலோ ''மூதாதையர் மரபு'' மக்கள்மேல் தாங்கவியலா பாரத்தைச் சுமத்தியது; உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற உறுதியோடு கடவுளைப் பற்றிக்கொண்டு, அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதற்கு மாறாக, கடவுளின் சட்டத்தைப் புறக்கணிக்க வழியாக மாறிவிட்டிருந்தது அந்த ''மரபு''.

நேர்மையான நடத்தை இல்லாத இடத்தில் வெளிவேடம்தான் மிஞ்சும். இதை இயேசு இரண்டு எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குகின்றார். கை கழுவுவதும் கிண்ணங்களைக் கழுவுவதும் மூதாதையர் மரபு மக்கள் மேல் திணித்த சட்டம். பெற்றோருக்கு உதவுவது பிள்ளைகளின் கடமை என்பது கடவுள் தந்த சட்டம். ஆனால் மூதாதையர் மரபுப்படி பெற்றோருக்குச் சேரவேண்டியதைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தாயிற்று என்று கூறிவிட்டு சிலர் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இவ்வாறு கடவுளின் சட்டம் புறக்கணிக்கப்பட்டது சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். சட்டம் நம்மை நல்வழியில் இட்டுச் செல்கின்ற வழிகாட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய நம்மை அடிமைப்படுத்துகின்ற சக்தியாக, வெளிவேடத்திற்குத் தூண்டுதலாக அமைந்துவிடலாகாது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உம்மை ஏற்று, செயல்முறையில் உம்மைப் போற்றிட எங்களுக்கு அருள்தாரும்.