யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் சனிக்கிழமை
2021-08-28




முதல் வாசகம்

, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-11

சகோதரர் சகோதரிகளே, சகோதர அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் மாசிதோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் அன்பு செலுத்தி வருகிறீர்கள். அன்பர்களே! இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டது போல, உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
திருப்பாடல்கள் 98;1,7-9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படு

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' (லூக்கா 13:23)

சில வேளைகளில் மனிதர் எழுப்புகின்ற கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றலாம். ஆனால், ஆழ்ந்து சிந்திக்கும்போது அங்கே புதைந்துகிடக்கின்ற அர்த்தத்தை நாம் காண முடியும். ''மீட்புப்பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' என்னும் கேள்வி இவ்வகையைச் சார்ந்தது எனலாம். இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே எருசலேமை நோக்கிச் செல்கிறார். அங்குதான் அவர் சிலுவையில் அறையுண்டு மனித இனத்தின் மீட்புக்காகத் தம்மையே பலியாக்குவார். பயணம் செல்கின்ற இயேசுவை அணுகுகிறார் ஒருவர். மீட்புப் பெறுவோர் சிலரா பலரா என்பதை அவர் அறிய விரும்புகிறார். இயேசு அவருக்கு நேரடியான பதில் வழங்கவில்லை. ஆனால், இறையாட்சியில் நுழைவதற்கான வாயில் ''இடுக்கமானது'' என இயேசு குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், இயேசுவோடு பழகி, அவரோடு விருந்து அருந்தி உறவுகொண்டாடியதைக் காட்டி விண்ணரசில் நுழைந்துவிடலாம் என நினைத்தால் அது தவறு எனவும் இயேசு சொல்கிறார். என்றாலும், கடவுளின் ஆட்சியில் அனைத்து மனிதரும் இடம் பெற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதில் ஐயமில்லை.

தாங்களே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்னும் இறுமாப்பில் தங்களுக்கு எப்படியும் கடவுளின்; ஆட்சியில் பங்கு உண்டு எனவும், தாங்கள் மீட்புப் பெறுவது உறுதி எனவும் மக்கள் நினைத்தலாகாது என்பதை இயேசு உணர்த்துகிறார். கடவுளின் ஆட்சி எல்லா மனிதருக்கும் உரித்தானது. எனவே, மீட்புப் பெறுவோர் உலகின் நான்கு திசைகளிலிருந்தும் வருவர்; இறையாட்சியில் பங்கேற்பர் (காண்க: லூக்கா 13:29). இவ்வாறு கடவுளின் மீட்பில் பங்கேற்போர் சிலரல்ல, பலரே என நாம் கூறலாம். என்றாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, ''இடுக்கமான'' வாயில் வழியாக நுழைய வேண்டும் என்னும் போதனையை நாம் மறந்துவிடல் ஆகாது. மீட்பு என்பது நாம் கேட்டுப் பெறுகின்ற ஓர் உரிமை அல்ல, மாறாகக் கடவுள் தாமாகவே விரும்பி நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. எனவே, மீட்பு என்னும் கொடைக்காக நாம் எந்நாளும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதே முறை.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு மீட்பு என்னும் கொடையை அளித்ததற்கு நன்றி!