யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் வியாழக்கிழமை
2021-08-26




முதல் வாசகம்

கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-13

அன்பர்களே! எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம். நீங்கள் ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும் எங்களுக்கு உயிர் வந்தது. நம் கடவுள் முன்னிலையில் உங்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை அவருக்குக் கைம்மாறாகக் காட்ட இயலும்? நாங்கள் உங்கள் முகத்தைக் காணவும், உங்கள் நம்பிக்கையில் குறைவாக உள்ளவற்றை நிறைவாக்கவும், அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன் மன்றாடுகிறோம். இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும், நம் ஆண்டவராம் இயேசுவும் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக! உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது பேரன்பால் நிறைவளியும்; நாங்கள் களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்.
திருப்பாடல்90: 3-4. 12-13. 14,17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.பல்லவி

17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம் கூறியது: ``விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு 13:35)

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர். இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற விழிப்பு அவரிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட பொறுப்பை முழுமனதோடு ஏற்று நடைமுறைப்படுத்துவதில் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க நமக்கு உந்துதல் தர வேண்டும். விழித்திருப்போர் தூக்க மயக்கத்தில் இருக்கமாட்டார்கள் (காண்க: மாற்கு 13:36). அவர்களுடைய இதயம் மழுங்கிய நிலையில் இருக்காது. மாறாக, விழித்திருப்போர் தம் இதயத்தைக் கடவுளுக்குத் திறந்து வைப்பார்கள்; அவர்களது இதயத்தில் கடவுள் நுழைந்திட யாதொரு தடையும் இருக்காது. எந்த நேரத்தில் கடவுள் அவர்களைத் தேடி வந்தாலும் அவர்கள் தங்கள் இதயக் கதவுகளைத் திறந்துவிட உடனடியாக முன்வருவார்கள். எனவே, இயேசு நம்மைப் பார்த்து, ''நான் உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்'' என அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பு நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு சவால் கூட.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் விழிப்பாயிருந்து உம் வரவை எதிர்கொள்ள அருள்தாரும்