யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






பொதுக்காலம் 20வது வாரம் வியாழக்கிழமை
2021-08-19

பனிதபேனாட்




முதல் வாசகம்

யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவரைக் கொண்டு வந்து எரிபலியாக்குவேன்.
நீதித் தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 11: 29-39

அந்நாள்களில் ஆண்டவரின் ஆவி இப்தாவுக்கு அருளப்பட்டது. அவர் கிலயாதையும், மனாசேயையும் கடந்து, கிலயாதிலிருந்த மிஸ்போவைக் கடந்து, அங்கிருந்து அம்மோனியரை நெருங்கினார். இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். ``நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால், அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும்பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரிபலியாக்குவேன்.\'\' இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார். இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர். இப்தா மிஸ்பாவிலிருந்து தம் வீடு திரும்பினார். இதோ! அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை. அவர் அவளைப் பார்த்தார்; தம் உடைகளைக் கிழித்துக்கொண்டு, ``ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்து விட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்து விட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!\'\' என்றார். அவள் அவரிடம், ``அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்து விட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்\'\' என்றாள். அவள் தந்தையிடம், ``என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்\'\' என்றாள். அவர், ``சென்று வா\'\' என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள். இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
திருப்பாடல் 40: 4. 6- 9.

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர். பல்லவி

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரி பலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.\' பல்லவி

7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது, என்றேன் நான். பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில் இயேசு மீண்டும் உவமைகள் வாயிலாகப் பேசியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், `நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்\' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். பின்னர் தம் பணியாளர்களிடம், `திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்\' என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, `தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?\' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், `அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்\' என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களோ சிலர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்...திருமணத்திற்கு வாருங்கள்'' (மத்தேயு 22:4)

கடவுளாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்னவென்பதை இயேசு பல உவமைகள் வழியாக விளக்கினார். இத்தகைய உவமைகளில் சிறப்பான ஒன்று ''திருமண விருந்து உவமை'' ஆகும். விருந்து என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. அதிலும் விதவிதமான உணவுகளைப் பரிமாறி அறுசுவை உண்டி வழங்கி விருந்தினரை மகிழ்விப்பது சாலச் சிறந்ததாக எண்ணப்பட்டது. விவிலியத்திலும் விருந்து பற்றிய குறிப்புகள் பல உண்டு. கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குவது விருந்துக்கு ஒப்பிடப்பட்டது (காண்க: எசாயா 25:6; லூக்கா 5:29; 14:13; யோவான் 2:2; 1 கொரிந்தியர் 11:20). எனவே, கடவுளின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் சுவையான விருந்து வழங்கப்படும் என்று இயேசு போதித்தார். கடவுளின் அன்பில் நாம் திளைத்திருக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திற்கும் இதயத்திற்கும் நிறைவை அளிக்கும். இவ்வாறு, கொடை வள்ளலாகச் செயல்படுகின்ற கடவுளின் அழைப்பைச் சிலர் ஏற்காமல் இருப்பதும் உண்டு. முதலில் அழைக்கப்பட்டவர்கள் இஸ்ரயேலர். அவர்களில் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்கத் தயங்கினர். ஆனால் பிற இனத்தார் பலர் கடவுளின் அழைப்பை ஏற்று, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அழைப்பை ஏற்று இயேசுவைப் பின்செல்ல வருவோருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அழைப்புக்கு ஏற்ப நடக்காதவர்க்கு உருவகமாகத் ''திருமண ஆடையின்றி வந்தவர்'' (காண்க: மத்தேயு 22:11) குறிக்கப்படுகிறார்.

கடவுள் நமக்குத் தருகின்ற விருந்து நம் உடலை வளர்க்க உதவுகின்ற உணவு மட்டுமல்ல. மனிதரின் முழு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நாம் கடவுளிடமிருந்து கொடையாகவே பெற்றுக்கொள்கிறோம். கடவுள் அளிக்கும் விருந்து வெறும் பொருள்கள் மட்டுமல்ல. இயேசுவின் வழியாகக் கடவுள் நமக்குத் தம்மையே விருந்தாக அளித்துவிட்டார். இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கின்றோம். தம்மையே விருந்தாகத் தரும் கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும். நம்மையே விருந்தாகப் பிறருக்கு அளிக்க முன்வரவேண்டும். அப்போது நமக்காகக் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிறைவுக் கால விருந்து நம்மை மகிழ்ச்சியால் நிரப்பும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள்கொடைகளை நன்றியோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.