யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-08-17

புனித பேனாட்




முதல் வாசகம்

`நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்''
நீதித் தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 6: 11-24

அந்நாள்களில் ஆண்டவரின் தூதர் ஓபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடும்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக் கொண்டிருந்தார். ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, ``வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்'' என்றார். கிதியோன் அவரிடம், ``என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவை எல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்து விட்டாரே!'' என்றார். ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, ``உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?'' என்றார். கிதியோன் அவரிடம், ``என் தலைவரே! எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன்! இதோ! மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடும்பம். என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன்'' என்றார். ஆண்டவர் அவரிடம், ``நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்'' என்றார். கிதியோன், ``உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும். நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்'' என்றார். அவரும், ``நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்'' என்றார். கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும் எடுத்துக் கொண்டு, அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார். கடவுளின் தூதர் அவரிடம், ``இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறை மீது வைத்துக் குழம்பை ஊற்று'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார். அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், ``ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!'' என்றார். ஆண்டவர் அவரிடம், ``உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே! நீ சாக மாட்டாய்'' என்றார். கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி எழுப்பினார். அதை `நலம் நல்கும் ஆண்டவர்' என அழைத்தார். அது இந்நாள்வரை அபியேசர் குடும்பத்தவருக்குச் சொந்தமான ஓபிராவில் உள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்
திருப்பாடல்கள் 85;8,10-13

8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது. பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், ``செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் இதைக் கேட்டு, ``அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ``நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர். ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பேதுரு இயேசுவைப் பார்த்து, 'நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டார்'' (மத்தேயு 19:27)

இயேசுவைப் பின்பற்றும் ஆவலோடு வந்தார் செல்வரான ஓர் இளைஞர். ஆனால், தம் சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல அவருக்குத் துணிவு இருக்கவில்லை. தமக்கும் அந்த இளைஞருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலைப் பின்னணியாகக் கொண்டு இயேசு, ''செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்'' என்றார் (மத் 19:23). செல்வத்திற்கும் இறையாட்சிக்கும் இடையே என்ன உறவு? செல்வம் இருந்தால் இறையாட்சியில் புக முடியாதா? இக்கேள்விகள் தொடக்க காலத் திருச்சபையில் எழுந்தன. யூத மரபைப் பார்க்கும்போது செல்வம் என்பது நல்லதையும் குறிக்கும் நல்லது செய்யத் தடையாகவும் இருக்கும். இவ்வுலக செல்வங்களை ஏராளமாகக் கொண்டிருக்கும் மனிதர் கடவுளின் ஆசியைப் பெற்றவர் என்னும் கருத்து அக்காலத்தில் நிலவியதுண்டு. எடுத்துக்காட்டாக யோபுவின் வரலாற்றைக் காட்டலாம். அங்கே யோபு கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்தியதால் கடவுள் அவருக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தார் என்னும் கருத்து உள்ளது (காண்க: யோபு 1:1-12; 42:10). கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, நற்பண்புகள் துலங்குகின்ற வாழ்க்கை நடத்துவோர் கடவுளிடமிருந்து செல்வங்களைப் பெறுவர் என இணைச்சட்ட நூலும் கூறுகிறது (காண்க: இச 28:1-14). அதே நேரத்தில் செல்வம் என்பது மனிதரைக் கடவுளிடம் இட்டுச் செல்வதற்கு மாறாக, மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே நிலவ வேண்டிய உறவுக்குத் தடையாக அமைந்துவிடலாம் என்னும் கருத்தும் விவிலியத்தில் உண்டு. குறிப்பாக, இறைவாக்கினர் செல்வத்தின் தீய விளைவுகள் பற்றிக் கடுமையான தீர்ப்பு அளித்தனர். எடுத்துக்காட்டாக, ஆமோஸ் இறைவாக்கினர் பேராசை கொண்டு ''வறியோரை நசுக்கி, ஏழைகளைச் சுறண்டி'' செல்வம் திரட்டிய மனிதரைக் கடுமையாகக் கண்டிக்கிறார் (காண்க: ஆமோ 8:4-6). செல்வம் என்பது மனித இதயத்தைக் கெடுத்துவிடக் கூடும் என்னும் இயேசுவின் போதனையை நாம் யூத மரபின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் ''நிறைவுள்ளவராய்'' இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவராய் மாற வேண்டும் என்றால் அதற்குச் செல்வம் ஒரு தடையாக இராதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற கடவுளின் ''நிறைவை'' நாம் அடைய வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம் (காண்க: மத் 5:28). இது ஒருசிலருக்கு மட்டுமே விடுக்கப்படுகின்ற சிறப்பு அழைப்பு அல்ல. மாறாக, எல்லா மனிதரும் நிறைவடைய வேண்டும் என்பதே கடவுளின் திருவுளம். மனித முயற்சியால் மட்டுமே இது நிகழும் என நாம் எதிர்பார்த்தல் ஆகாது. மாறாக, நமக்குக் கடவுளின் அருள்துணை தேவைப்படுகிறது. செல்வத்தைத் துறந்துவிடுவது மடமை என உலகம் கருதலாம். ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் நாம் அவரை முழுமையாக நம் வாழ்வில் ஏற்று, அவரையே முழுமையாகப் பற்றிக்கொள்ள வேண்டும். உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு, கடவுளையே பற்றிக்கொள்ள முன்வருவது கடினமே. ஆனால் கடவுளின் துணைகொண்டு நாம் எதையும் சாதிக்க முடியும் என இயேசு நமக்கு உணர்த்துகிறார். கடவுளால் ஆசிபெற்றவர்களாகக் கருதப்பட்ட செல்வர்களுக்கே விண்ணகம் புகுவது கடினம் என்றால் யார்தான் மீட்புப் பெற முடியும் என்று கூறி வியப்படைந்த சீடர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கும் பொருந்தும்: ''மனிதரால் இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' (மத் 19:25-26). ஆக, கடவுளையும் அவர் பெயரால் நம் மீட்பராக வந்த இயேசுவையும் நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு, இறையுறவிலிருந்து நம்மைப் பிரிக்கின்ற பற்றுக்களை அறுத்துவிட அழைக்கப்படுகிறோம். அப்போது ''நிலைவாழ்வை உரிமைப் பேறாக அடைவோம்'' (மத் 19:29).

மன்றாட்டு:

இறைவா, தூய்மையான உள்ளத்தோடு உம்மையே நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.