திருவழிபாடு ஆண்டு - B 2021-08-15
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா
(இன்றைய வாசகங்கள்:
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டி லிருந்து வாசகம் 11: 19; 12: 1-6,10,திருப்பாடல் 45: 9. 10-11. 15,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56)
திருப்பலி முன்னுரை
தந்தையாம் இறைவனின் அன்புமக்களாகி உங்களோடு ஆண்டின் பொதுக்காலம் 20 ஆம் வார ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்று நாம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அன்னையை வாழ்த்துவோம், அன்னையை நமக்குக் கொடையாகத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
அன்னை மரியாளைப் போன்று நாமும் இறைவனுக்குக் கீழ்படிந்து, அவருடைய வார்தைகளைத் தியானித்து அவருடைய விருப்பத்திற்கேற்ப வாழும்பொழுது நம்முடைய இறப்பிற்குப் பிறகு நாமும் உறுதியாக கிறிஸ்துவினுடைய மீட்பில் பங்கு கொள்வோம். கிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கு சாவு என்பது முடிவல்ல மாறாக விண்ணக வாழ்விற்கான வழி. நமது அன்னையினுடைய தாய்க்குரிய பரிந்துரையில் நம்பிக்கை வைத்து நமது விண்ணக வாழ்வின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டி கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ வாழ்வை நம்பிக்கையோடு நன்கு வாழ்; நம்மை அவரிடம்; ஒப்படைப்போம்.
எத்தனை தடைகள் வந்தாலும் அன்னை மரியாளைப் போன்று என் ஆண்டவர் என்னைக் கைவிட மாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு பயணிப்போம். இறைவனுடைய ஆசீரும் அன்னை மரியாளுடைய பரிந்துரையும் நமக்கு என்றும் கிடைக்க தொடரும் திருப்பலியில் வரம்கேற்போம்.
முதல் வாசகம்
எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டி லிருந்து வாசகம் 11: 19; 12: 1-6,10
விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.
வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: ``இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!
திருப்பாடல் 45: 9. 10-11. 15
அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்;
ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! -பல்லவி
10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்!
உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்;
உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! -பல்லவி
15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். -பல்லவி
இரண்டாம் வாசகம் கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அந்நாள்களில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ``பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: ``ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.''
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழ்வு தருபவராம் இறைவா, விண்ணக உணவாகிய கிறிஸ்துவால் வலிமை பெற்று, உமது மந்தையை அருள் வாழ்வில் வழிநடத்தும் ஆற்றலை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உமது அன்னையை எங்களுக்கும் தாயாகத் தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். மரியாவை தாயாக ஏற்க மறுக்கும் அனைவருக்காகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். அவரைத் தாயாக ஏற்று மகிழும் நாங்கள், அந்தத் தாயின் மனம் குளிரும்படி, உம் வார்த்தைகளின்படி வாழ அருள்தந்து வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பரிவுள்ளவராம் இறைவா உலகிற்கு வாழ்வளிப்பதற்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த இயேசுவில் இந்த உலகம் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் நிலை வாழ்வை மக்கள் அனைவரும் பெற்று மகிழவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அன்பின் அரசராம் இறைவா, எங்கள் நாட்டு மக்களும், தலைவர்களும் உமது அன்பின் அரசை விரும்பித் தேடவும், அதன் மூலம் நீர் வழங்கும் அருள்வாழ்வைப் பெற்று நீதியிலும், அன்பிலும், உண்மை நெறியிலும் வளர்ச்சி காணவும் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
காலங்களைக் கடந்த எம் இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் "எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே" என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், எதிர்காலம் கேள்விகுறியதாக இருக்கும் காலகட்டத்தில் உம் அருளால் அதனைச் சிறப்பாக வெற்றிக் கொள்ள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வின் ஊற்றாம் இறைவா, எங்களுக்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உணவாகிய இயேசுவில் முழுமையான நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வின் பேறுபலன்களைப் பெற்று மகிழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
குணமளிக்கும் மருத்துவரே இறைவா, உலகெங்கும் புரிந்துகொள்தல், ஏற்றுக்கொள்தல், விட்டுக்கொடுத்தல், அன்புசெய்தல், அரவணைத்தல், பரிவுகாட்டுதல், நீதியை நிலைநாட்டுதல், பிறரை மதித்தல், உண்மைத் தேடுதல், அமைதி ஏற்படுத்துதல் போன்ற நன்மைகளுக்கு எதிரான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நீரே உமது வார்த்தையாலும், அருள் அடையாளங்களாலும் கற்றுத் தருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|