யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-08-13

அங்கேரி புனிதஸ்தேவான்




முதல் வாசகம்

உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-13

அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: ``இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: `முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர். உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து, கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்; அவனது வழிமரபைப் பெருக்கினேன்; அவனுக்கு ஈசாக்கை அளித்தேன். ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்; ஏசாவுக்கு செபீர் மலையை உடைமையாக அளித்தேன். யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர். மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன். பின்னர் உங்களை வெளியே கொணர்ந்தேன். உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். எகிப்தியர் தேரில் குதிரைகளுடன் செங்கடலுக்குள் உங்கள் தந்தையரைத் துரத்திச் சென்றனர். அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள். யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக் கொண்டு வந்தேன். அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள். நான் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தேன். அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக் கொண்டீர்கள். உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன். மோவாபின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் படை திரட்டிப் போர் தொடுத்தான். உங்களைச் சபிக்குமாறு பேகோரின் மகன் பிலயாமை அழைக்க ஆள் அனுப்பினான். நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான். உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன். நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன். நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று; உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்
திருப்பாடல்கள் 136: 1-3. 16-18. 21,22,24

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். 2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 3 தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள். பல்லவி

16 பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள். 17 மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள். 18 வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். பல்லவி

21 அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். 22 அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். 24 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது'

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், ``ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?'' என்று கேட்டனர். அவர் மறுமொழியாக, ``படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?'' என்று கேட்டார். மேலும் அவர், ``இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, ``அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?'' என்றார்கள். அதற்கு அவர், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, ``கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது'' என்றார்கள். அதற்கு அவர், ``அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்'' (மத்தேயு 18:15)

கிறிஸ்து வழங்கிய அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு. ஒன்று, நாம் கடவுளை அன்புசெய்வது, மற்றொன்று நாம் பிறர் மட்டில் அன்புகாட்டுவது. இந்த இரு பக்கங்களும் ஒரே அன்புக் கட்டளையின் இணைபிரியா அம்சங்கள். ஆனால், பிறரை அன்புசெய்ய வேண்டும் என்னும் கட்டளையை நடைமுறையில் கடைப்பிடிப்பது எப்படி? அன்பின் வடிவங்கள் பல. அவற்றுள் ஒன்றுதான் பிறர் குற்றம் செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக நாம் எடுக்கும் முயற்சி. பிறரிடம் குற்றம் காண்பதையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்வோர் சிலர் உண்டு. இவர்கள் தங்களுடைய குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பிறரைத் திருத்துவதிலேயே கருத்தாயிருப்பார்கள். இது இயேசுவின் அணுகுமுறை அல்ல. நம்மிடம் காணப்படுகின்ற குறைகளை நாம் களைந்துவிட்டு, அதன் பின்னர் பிறரிடம் உள்ள குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதே முறை. ஆனால், குற்றம் காண்பதிலும் பல வகைகள் உண்டு. பிறரைக் குறைகூறுவதற்கென்றே குற்றம் காண்பது உண்மையான அன்பு அல்ல. மாறாக, பிறர் நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்னும் நல்லெண்ணத்தோடு பிறருடைய குற்றங்களைத் திருத்துவதற்கு நாம் முயன்றால் அதுவே பிறரன்பின் சிறந்த வெளிப்பாடாக அமையும்.

பிறரைத் திருத்த நாம் முனையும்போது முதல்முதலில் அவர்களோடு தனித்துப் பேசி அக்குறையைச் சரிப்படுத்த வேண்டும் என்பது இயேசு வழங்குகின்ற வழிமுறை. இயேசு இவ்வாறு ஏன் கூறுகிறார் என்றொரு கேள்வியை நாம் கேட்கலாம். இயேசுவின் பார்வையில் எந்த ஒரு மனிதரும் தம்மைக் குற்றமற்றவர் எனக் கூறிட இயலாது. கடவுளின் முன்னிலையில் நாம் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் நம் அனைவருக்கும் தேவையானதே. அப்படியிருக்க, நம் சகோதரர் சகோதரிகளிடம் மட்டும் குற்றம் இருப்பதாக எண்ணி நாம் செயல்படுவதற்கு மாறாக, நமக்குக் கடவுளின் மன்னிப்பு அருளப்படுவதுபோல பிறரும் அதே அன்பு அனுபவத்தை நம் செயல்கள் வழியாகப் பெற்றிட நாம் வழிவகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெறுகின்ற மன்னிப்பு அனுபவத்தால் ஊக்கம் பெற்று எங்களை அடுத்திருப்போரையும் அன்போடு நெறிப்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.