இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 19வது வாரம் வியாழக்கிழமை 2021-08-12
முதல் வாசகம்
ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 3: 7-10, 11, 13-17
அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ``இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு\'\' என்றார்.
யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், ``இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள். வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது. உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்\'\' என்றார்.
மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும். மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகுதொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர் எதிராகக் கடந்து சென்றனர். இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
அல்லேலூயா.
திருப்பாடல் 114: 1-2. 3-4. 5-6
எகிப்து நாட்டை விட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, 2 யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித் தளம் ஆனது. பல்லவி
3 செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது. 4 மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. பல்லவி
5 கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்? 6 மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள் போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்? பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21 - 19: 1
அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ``ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?\'\' எனக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ``ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்\' என்றான்.
அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, `நீ பட்ட கடனைத் திருப்பித் தா\' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.
உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்\' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.
ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்
நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?'' (மத்தேயு 18:21)
மன்னிப்பு என்பது எளிதில் நிகழும் காரியம் அல்ல. சாதாரண மனித இயல்பைப் பார்த்தால் நமக்கு எதிராக யாராவது தீங்கிழைக்கும் வேளையில் அவர்ளை உடனடியாகத் தண்டிக்கத்தான் மனம் வரும்; அல்லது பழிக்குப் பழி என்னும் எண்ணம் நம்மை ஆட்கொண்டுவிடும். எனவே, பேதுரு இயேசுவிடம் கேட்ட கேள்வி நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் எழுகின்ற, எழக் கூடுமான கேள்வியே என்றால் மிகையாகாது. எத்தனை முறை மன்னிப்பது என்று பேதுரு கேட்ட கேள்விக்கு இயேசு வழங்கிய பதில் என்ன? ''ஏழுமுறை மட்டும் மன்னித்தால் போதாது; ஏழுபது தடவை ஏழுமுறை நீ மன்னிக்க வேண்டும்'' (காண்க: மத் 18:23). இதை விளக்கிட இயேசு ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். மிகப் பெரிய தொகையைக் கடனாக வாங்கிய ஒருவருடைய முழுக்கடனும் மன்னிக்கப்பட்டது. ஆனால் அவரோ தன்னிடமிருந்து மிகச் சிறிய தொகை கடனாகப் பெற்ற ஒருவருக்கு மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார். பிறருடைய குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளும் நமக்கு மன்னிப்பு அருளமாட்டார் என இயேசு இக்கதை வழி நமக்குப் போதிக்கிறார் (மத் 18:21-35).
மன்னிப்பு அன்பின் உயரிய வெளிப்பாடு. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் நன்மை செய்ய விரும்புவது இயல்பு. ஆனால் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்வது கடினமான செயல். நம் உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால்தான் நாம் பிறரை மன்னிக்க முன்வருவோம். கடவுள் நம் பாவங்களையும் குற்றங்களையும் மன்னிக்கிறார். ஆனால், நாம் பிறருக்கு மன்னிப்பு வழங்க மறுத்தால் கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது முரண்பாடாகத்தானே இருக்கும்! கடவுளிடம் மன்னிப்புக் கேட்போர் பிறரையும் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போது இயேசு பேதுருவுக்கு வழங்கிய பதில் நமக்கும் பொருத்தமாக அமையும். அதாவது எத்தனை தடவை மன்னிப்பது என நாம் விரல்விட்டு எண்ணிப் பார்க்காமல் எப்போதெல்லாம் பிறர் நமக்குத் தீங்கு இழைக்கின்றனரோ அப்போதெல்லாம் மனமுவந்து மன்னித்திட முன்வர வேண்டும். இத்தகைய தாராள மனம் இயேசுவிடம் இருந்தது. சிலுவையில் தொங்கிய வேளையிலும் அவர், ''தந்தையே, இவர்களை மன்னியும்'' (லூக்கா 23:34) என்று மன்றாடியதுபோல நாமும் உளமார மன்னிப்போம்.
மன்றாட்டு:
இறைவா, மன்னிக்கும் மனப்பான்மை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.
|