யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-08-08

(இன்றைய வாசகங்கள்: அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8, திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30 - 5: 2,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

நிலைவாழ்வுக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவில் நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் இயேசு, தன்னில் நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வை வாக்களிக்கிறார். உலகு வாழ்வதற்காக இயேசு தன்னையே கையளிக்கிறார். இயேசு விண்ணகத் தந்தையிடம் இருந்து வந்தவர் என்ற நம்பிக்கையால் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8

அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார். ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30 - 5: 2

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51

அக்காலத்தில் ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே'' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். ``இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, `நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படிச் சொல்லலாம்?'' என்று பேசிக் கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ``உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். `கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வு தருபவராம் இறைவா,

விண்ணக உணவாகிய கிறிஸ்துவால் வலிமை பெற்று, உமது மந்தையை அருள் வாழ்வில் வழிநடத்தும் ஆற்றலை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வீரத்தின் விளைநிலமே இயேசுவே,

உம்மிடம் விளங்கிய நேர்மை, துணிவு, உண்மைக்காக உம்மைப் போற்றுகிறேன். இவை என்னிடம் போதுமான அளவு இல்லாததால் பல வேளைகளில் முணுமுணுத்து, என் இயலாமையை, கோழைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். மன்னியும். ஆண்டவரே, என்னை உம் தூய ஆவியால் நிரப்பும். வீரமும், நேர்மையும் தாரும். உண்மையை உரக்கப் பேசவும். நல்லதை துணிவுடன் ஏற்றுக்கொள்ளவும் எனக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பரிவுள்ளவராம் இறைவா

உலகிற்கு வாழ்வளிக்கும் உணவாக நீர் அனுப்பிய உமது திருமகன் இயேசுவை உலக மக்கள் அனைவரும் சுவைத்து மகிழுமாறு, திறந்த மனதோடு உண்மையத் தேடும் எண் ணத்தை மானிடர் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் அரசராம் இறைவா,

எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல், அன்புசெய்தல் ஆகிய மதிப்பீடுகளில் வளரவும், உண்மைக் கடவுளாகிய உம்மைத் தேடி அறிந்துகொள்ளவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

காலங்களைக் கடந்த எம் இறைவா!

உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் "எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே" என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், எதிர்காலம் கேள்விகுறியதாக இருக்கும் காலகட்டத்தில் உம் அருளால் அதனைச் சிறப்பாக வெற்றிக் கொள்ள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வின் ஊற்றாம் இறைவா,

எங்களுக்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உணவாகிய இயேசுவில் முழுமையான நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வின் பேறுபலன்களைப் பெற்று மகிழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உலகெங்கும் அரசியல், சமூக, சமய சூழ்நிலைகளில் சிக்குண்டு, உம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துணர முடியாத வகையில் வாழும் மக்கள் அனைவருக்கும், உம்மில் நம்பிக்கை கொள்ளும் சூழ்நிலையை அமைத்து கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே,

நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நீரே உமது வார்த்தையாலும், அருள் அடையாளங்களாலும் கற்றுத் தருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம், ''என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்' என்றார்'' (யோவான் 6:44)

மனிதர் தம் சொந்த முயற்சியால் கடவுளை அடைய முடியாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். கடவுளைத் தேடிச் செல்கின்ற மனிதர் கடவுளைக் கண்டுபிடிப்பார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான ஆவலை நம் உள்ளத்தில் பதித்தவரே கடவுள்தாம். தம்மை மக்கள் தேடி வர வேண்டும் என்பது கடவுளின் திருவுளம் என்றால் அத்தேடலை நிறைவு செய்பவரும் கடவுளே. எனவேதான் கடவுள் நம்மை முதலில் அன்புசெய்தார் (காண்க: 1 யோவா 4:19 - ''அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்''). இந்த அன்பு எல்லையற்றது; நிகரற்றது. ஆனால், மனிதர் கடவுள்மட்டில் காட்டுகின்ற அன்பு எப்போதுமே குறைவுள்ளதுதான். அந்த அன்பு நம்மிடமிருந்து எழவேண்டும் என்றால் அதற்கு முதல் படியாக அமைவது கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்புதான். எனவேதான் கடவுள் நம்மை ஈர்க்கிறார் என இயேசு கூறுகிறார் (காண்க: யோவா 6:44). காந்தம் இரும்பை ஈர்க்கும்போது இரும்பு காந்தத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். அதுபோல, கடவுள் நம்மை ஈர்ப்பதால் நாம் அவரில் இணைகிறோம்; அந்த அன்பில் மகிழ்ச்சியடைகிறோம். எனவே கடவுளை அன்புசெய்வதற்கு நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குபவர் கடவுளே எனலாம்.

இவ்வாறு கடவுளால் ஈர்க்கப்பட்டு அவருடைய அன்புப் பிணைப்பில் மகிழ்ச்சியடைகின்ற நாம் கடவுளிடமிருந்து தலைசிறந்த ஒரு கொடையைப் பெற்றுக்கொள்கின்றோம். இதை நற்செய்தி நூல்கள் பல சொற்களைப் பயன்படுத்தி விளக்கிச் சொல்கின்றன. கடவுள் நமக்கு வழங்குகின்ற கொடை யாது? இறையாட்சியில் நாம் பங்குபெறக் கடவுள் நம்மை அழைக்கிறார்; கடவுள் நமக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றார்; நிலைவாழ்வைக் கடவுள் நமக்குத் தருகிறார். இவ்வாறு கடவுளின் கொடையை நாம் பெற்றுக்கொள்கின்றோம். இயேசு கடவுளிடமிருந்து வந்து நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, மீண்டும் கடவுளின் அரசில் மாட்சிமை பெற்றதுபோல நாமும் இயேசுவின் மீட்புச் செயல் வழியாகக் கடவுளின் ஆட்சியில் நிறைவாகப் பங்கேற்கும் பேற்றினைப் பெற்றுள்ளோம். இது கடவுள் நமக்கு வழங்கும் கொடையேயன்றி, நாமாக தேடிக்கொள்கின்ற செல்வம் அல்ல. கடவுள் வழங்குகின்ற கொடை நமக்கு நிலைவாழ்வாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.