யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் புதன்கிழமை
2021-08-04




முதல் வாசகம்

நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப் பழியைச் சுமப்பீர்கள்;
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 13: 1-2,25-33, 14: 1,26-30,34-35

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடம், ``இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்'' என்றார். நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் பாரான் பாலைநிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர். அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி. ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்; அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர். காலேபு மோசே முன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, ``நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக்கொள்வோம்; ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிட முடியும்'' என்றார். ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், ``நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்'' என்றனர். இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்; அத்துடன் நெப்பிலிமில் இருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். உடனே மக்கள் கூட்டமைப்பு முழுவதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுதுகொண்டே இருந்தனர். மேலும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கு எதிராக முறுமுறுப்பர்? எனக்கு எதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன். நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியது, ``ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில் படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்; எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலை நிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள். நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக, நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப் பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கு எதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்து முடிப்பேன்; இப்பாலை நிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம் மக்கள்மீது இரங்கும்போது ஆண்டவரே என்னை நினைவுகூரும்!
திருப்பாடல்கள் 106: 6-7. 13-14. 21-22. 23

6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம். 7 எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. -பல்லவி

13 ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. 14 பாலை நிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். -பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். -பல்லவி

23 ஆகையால், அவர்களை அவர் அழித்து விடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்'

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ``ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்'' எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ``நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்'' என வேண்டினர். அவரோ மறுமொழியாக, ``இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்'' என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ``ஐயா, எனக்கு உதவியருளும்'' என்றார். அவர் மறுமொழியாக, ``பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்றார். உடனே அப்பெண், ``ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே'' என்றார். இயேசு மறுமொழியாக, ``அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்'' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசுவின் உருமாற்றம் !

இன்று நாம் இயேசுவின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. தம் சீடர்களில் மிகவும் நெருக்கமான மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு மலையேறும் இயேசு அங்கே செபிக்கிறார். செபிக்கும்போதே அவரது தோற்றம் மாறுகிறது. அவரது மனித சாயல் மறைந்து, இறைச் சாயல் வெளிப்படுகிறது. அவரது ஆடை வெண்ணிறத்தில் ஜொலிக்கிறது. விண்ணகக் காட்சியாக அது மாறுகிறது. பழைய ஏற்பாட்டின் இரு பெரும் தூண்களான மோசேயும், எலியாவும் தோன்றி அவருடன் உரையாடுகிறார்கள். ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்கிறது. “இவரே என் மைந்தர்” என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலிக்கிறது. இதுதான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு. எதற்காக இயேசு தோற்றம் மாறினார்? இந்த நிகழ்வின் தாக்கம் என்ன? என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

1. இயேசு உண்மையிலேயே இறைமகன், தந்தை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பதை இந்த நிகழ்வு எண்பிக்கிறது. எனவே, அவரது சீடர்களின் நம்பிக்கை ஆழப்படுவதற்காக இந்த உருமாற்றம் நிகழ்ந்தது.

2. இத்தனை மாட்சிமை நிறைந்த இறைமகனாம் இயேசு தந்தையின் விருப்பப்படி சிலுவைச் சாவை ஏற்க வேண்டும் என்பதை சீடர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பட்டது.

3. மாட்சியும், துன்பமும், பாராட்டும்-அவமானமும் மானிட வாழ்வு என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதையும் இது எடுத்துச்சொல்கிறது.

மன்றாட்டு:

தெய்வீக மாட்சி மிக்க ஆண்டவர் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது மாட்சியை நீர் விட்டுவிடாமல், உம்மையே தாழ்த்தி சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டீரே, உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள ஆற்றல் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.