யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-07-30
முதல் வாசகம்

ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்
லேவியர் புத்தகத்திலிருந்து வாசகம் 23;1,4-11,15-16,27,34-38

ஆண்டவர் மோசேயிடம் கூறியது;4 நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன; 5 முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. 6 அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழுநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். 7 பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. 8 ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. 9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது; 10 இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது; நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். 11 உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.15 ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். 16 ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.27 அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.34 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது; ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். 35 முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம். 36 ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. 37 ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, 38 அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது
திருப்பாடல்கள் 81;2-5,9-10

2 இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைந்து இனிமையாய்ப் பாடுங்கள்.பல்லவி

3 அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழாநாளில் எக்காளம் ஊதுங்கள்.4 இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.பல்லவி

5 அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன்.பல்லவி

9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.பல்லவி

10 உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்துவந்த கடவுளாகிய ஆண்டவர் நானே; உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்; நான் அதை நிரப்புவேன்.பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13;54-58

அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், ``எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

உலகம் தரமுடியாத அமைதி !

தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாடுகூட, பொருளாதார வளர்ச்சி பெற்றாலும், அண்டை நாடுகளாலும், நக்சலைட் தீவிரவாதத்தாலும் அமைதியின்றித் தவிக்கின்றது. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும். குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும். முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.

மன்றாட்டு:

அமைதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.