முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 17வது வாரம் வியாழக்கிழமை 2021-07-29
புனித அல்போன்ஸ் மரியலிகோரி
முதல் வாசகம்
பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 40: 16-21, 34-38
அந்நாள்களில் ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே செயல்பட்டார். இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது. மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப் பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார், குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார். திருஉறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது. உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார். திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத் திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். பின்பு, மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. சந்திப்புக் கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று. இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திருஉறைவிடத்தை விட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள். மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள் வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள். ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!
திருப்பாடல்கள் 84;3-6,8-11
2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை
மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. -பல்லவி
r>
3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே!
உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது;
தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்
சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. -பல்லவி
r>
4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்;
அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.
7 அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். -பல்லவி
r>
10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும்
உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது;
பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,
என் கடவுளது இல்லத்தின் வாயிற் காவலனாய் இருப்பதே இனிமையானது. -பல்லவி
r>
நற்செய்திக்கு முன் வசனம்
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53
அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
".. ..என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
மரண பயம் யாருக்கு? சாவைச் சந்திப்பவனுக்கா? அருகில் இருப்பவனுக்கா? சாவைச் சந்திப்பவன்கூட பயப்படுவதில்லை. அவர்கள் மறை சாட்சிகள், கொள்கை வீரர்கள். புனிதர்கள், புலிகள். சில தொண்ணூறுகளும் சாவைக்கண்டு பயப்படுகிறது. வேறு சில இருபதுகள் கொள்கைக்காகச் சாவைத் தேடிச் செல்கிறது. கூட இருந்தவனுக்குப் பயம். அடடே இவனை நம்பி இருந்தேனே, எல்லாம் முடிந்துவிட்டதே. இப்படி திடுதிப்பென்று போய்விட்டானே. பாவத்தில் வாழ்பவனும், அருள் நிலை இழந்தவனும்,கொள்கை இல்லாதவனும் இந்த சாவைக்கண்டு பயந்து தினமும் செத்துக்கொண்டிருக்கும் நடை பிணங்கள். உண்மையைச் சொல்ல பயம், நியாயத்தை பேச பயம். தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்குக் கவசத்திற்காகக் கல்லறையை தேர்ந்துகொண்ட புத்திசாலிகள். "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்னும் நம்பிக்கை வார்த்தைகளால் மரணத்திற்கு உயிர்ப்பு கொடுக்கிறார் இயேசு. சிலரை இந்தச்சமுதாயம் வாழவிடாமல் கட்டி, அடக்கி, அமிழ்த்தி, பெருஞ்சுமையைப் புரட்ட முடியாப் பாராங்கல்லாய் வைத்து சமாதியாக்கிவிடுகிறது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்"என்று மீண்டும் ஒரு வாழ்வை வழங்குகிறார் இயேசு.
இன்று இறப்புக்கள் பல விதம். உடலின் உயிர் பிரிவது ஒரு இறப்பு. உன்னில் ஆன்மீகம் அழிவதும் இறப்பு. அறிவு அழிவதும் இறப்பு. நற்பண்பு, அறநெறி,பண்பாடு,கலாச்சாரம் அழிவதும் இறப்பு, பொருளாதாரம் பற்றாக்குறை ஏற்படுவதும் இறப்பு. இந்த அழிவுகளால் எல்லாம் முடிந்துவிட்டது. நான்கு நாட்களாகிவிட்டது, நாற்றமடிக்குமே என்று நைந்துவிட அவசியமில்லை. நம்பிக்கையுடையவன் இதை புது வாழ்வுக்குச் சாதகமாக்கிக்கொள்கிறான். குழந்தை இளைஞனாகும்போது குழந்தை தன்மை அழிவது இறப்பு அல்ல, வளர்ச்சியின் ஒரு கட்டம். இளம்பெண் தாயாவது அழிவு அல்ல, புது வாழ்வின் ஒருபடி. ஆகவே இறப்பு என்பது புதிய ஒன்றை உருவாக்கும் பாதை. இறப்பையும் இழப்பையும் தாண்டி புது வாழ்வைப் பெறுவதுதான் இயேசு கற்றுத்தந்த வாழ்க்கைத் தத்துவம்.இதை நம்பி, இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
மன்றாட்டு:
செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே, நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|