யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-07-23

புனித சுவக்கிம் அன்னா (அன்னைமரியா பெற்றோர்)




முதல் வாசகம்

என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20;1-17

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப் பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்கு உரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
திருப்பாடல்கள் 19;8-11

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. பல்லவி

11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள்

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13;18-23

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன" (மத்தேயு 13:8)

விதைப்பவர் உவமை என்னும் கதைக்கு விளக்கம் இயேசுவே அளித்தார் என மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். அந்த விளக்கத்தின்படி நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் "இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வோருக்கு" ஒப்பாகும் (காண்க; மத் 13:23). இறைவார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதைக் கேட்டால் மட்டும் போதாது. நமது உள்ளம் பண்படுத்தப்பட்ட நிலத்தைப்போலப் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அப்போது அந்த நன்னிலத்தில் விழுகின்ற இறைவார்த்தை என்னும் விதை நன்றாக வேரூயஅp;ன்றி, தளிர்த்து, கதிர்விட்டுப் பன்மடங்காகப் பலன் தரும்.

இறைவார்த்தை என்னும் விதை நம்மில் வேரூயஅp;ன்றி வளர்ந்தால் என்ன பலன் தோன்றும்? இறைவார்த்தை மனிதராக உருவெடுத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. அந்த இறைவார்த்தை கடவுளோடு இருந்தார் எனவும் கடவுளாகவும் இருந்தார் எனவும் யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது (யோவான் 1:1-14). எனவே, நம்மில் இறைவார்த்தை பலன் தரவேண்டும் என்றால் நாம் இறைவார்த்தையின் உச்ச வெளிப்பாடான இயேசுவைப் போல வாழ வேண்டும். அவருடைய மதிப்பீடுகள் நம் மதிப்பீடுகளாக வேண்டும். அவர்தம் ஆவியால் நாம் இயக்கப்பட வேண்டும். அப்போது நம் இதயத்தில் தூவப்பட்ட கடவுளின் வார்த்தை என்னும் விதை நற்பயன் நல்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தை எங்கள் உள்ளத்தில் பதிந்து, வேர்விட்டு எங்கள் வாழ்வில் நற்கனிகளைத் தாராளமாக ஈந்திட அருள்தாரும்.