யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-07-20
முதல் வாசகம்

இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14;21-31, 15;1

அந்நாள்களில் மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச் செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல் வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், ``இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்றுவிடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்'' என்றனர். ஆண்டவர் மோசேயை நோக்கி, ``நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள், குதிரை வீரர் அனைவர் மேலும் திரும்பி வரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு'' என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பி வந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

: ஆண்டவருக்கு புகழ் பாடுவேன்: ஏனெனில், மாட்சியுடன் வெற்றி பெற்றார்.
திருப்பாடல்கள் 15;8-10,12-17

8 உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன; பேரலைகள் சுவரென நின்றன; கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின. 9 எதிரி சொன்னான்: `துரத்திச் செல்வேன்; முன்சென்று மடக்குவேன்; கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்; என் வாளை உருவுவேன்; என் கை அவர்களை அழிக்கும்'. பல்லவி

10 நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக் கொண்டது; ஆற்றல்மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர். 12 நீர் உமது வலக்கையை நீட்டினீர். நிலம் அவர்களை விழுங்கிவிட்டது. பல்லவி

17 ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12;46-50

46அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். 47 ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார். 48 அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று கேட்டார். 49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே. 50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

உறவின் உருப்பெருக்கம்.. அதுவே வாழ்வின் நியதி.

மனிதன் இவ்வுலகில் வாழும்போது இனிது வாழ வேண்டும் என்பதில்தான் இந்த இயேசுவுக்கு என்னே ஆசை. உறவு என்னும் பாச வலைக்குள் உலகை அடக்கிக் கொண்டால் உலகத்தையே சொரக்கமாக்கிவிடலாம் என்பது இயேசுவின் ஆசை. அற்புதமான திட்டம். வலைக்குள் சிக்கிய புறாக்கள், எண்ணத்திலும் உறவிலும் ஒன்றுபட்டதால் வேடனின் கண்ணியிலிருந்து தப்பிய கதை போல மனிதனும் விண்ணில் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்பது இறைவனின் திட்டம். இத்திட்டத்தின் செயல் வடிவமாக உறவு என்னும் பாச வலையைப் பெரிதாக்குகிறார். அன்பு என்னும் ஆற்றின் கரையை அகலமாக்குகிறார். அணைக்கும் கைகளின் நீளத்தை நீட்டுகிறார். ஏங்கும் இதய துடிப்பொலியை துல்லியமாக்குகிறார். உறவு வட்டத்தின் விட்டத்தை உலகின் விழிம்புவரை நீட்டுகிறார். "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று இயேசு பதில் சொன்னபோது இந்த உருப்பெருக்கும் முயற்சியைதான் செய்கிறார். தன் திட்டத்தின் தொடக்கமாக, மையமாகத் தன் தாயை வைத்து ஆரம்பிக்கினறார். அன்னை மரியாள் அனைத்தின் தொடக்கமும் மையமும் அல்லவா!. மனிதா! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவரது உருப்பெருக்கும் திட்டத்தை உருக்குலைத்து, சுயநலப் பதுங்குக்குழிகள் தோண்டிக்கொண்டிருக்கிறாய்.ஆற்றின் கரையை அகலமாக்குவதை விட்டு விட்டு, இருக்கின்ற வாய்க்காலையும் உன் வயலாக்குகிறாய். உன் வசதிக்காக, இன்பத்திற்காக, உன் மனைவி மக்னளையும் நீ விட்டுவைப்பதில்லையே. உறவின் உருப்பெருக்கம் இயேசு தந்த வாழ்க்கைத் தத்துவம். நம் அன்னை மரியாளில் தொடங்கியது. அதுவே வாழ்வின் நியதி.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் இயேசுவை நாங்கள் ஆண்டவராக ஏற்று அவருக்குச் சான்று பகர எங்களைத் திடப்படுத்தியரும்.