முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 16வது வாரம் திங்கட்கிழமை 2021-07-19
முதல் வாசகம்
ஆண்டவர் மோசேயை நோக்கி, ``ஏன் என்னை நோக்கி அழவேண்டும்?
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 5-18
அந்நாள்களில் மக்கள் ஓடிப் போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது. ``நாம் இப்படிச் செய்துவிட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?'' என்று அவர்கள் பேசிக்கொண்டனர். எனவே அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான். ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்; அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக் கை உயர்த்தியவாறு சென்று கொண்டிருந்தனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கியிருந்த அவர்களை நெருங்கினர். பார்வோன் நெருங்கிவந்துகொண்டிருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர். அவர்கள் மோசேயை நோக்கி, ``எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்து வந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே! `எங்களை விட்டு விடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்' என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்'' என்றனர். மோசே மக்களை நோக்கி, ``அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப் போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்'' என்றார். ஆண்டவர் மோசேயை நோக்கி, ``ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்து விடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, `நானே ஆண்டவர்' என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்'' என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவருக்குப் புகழ் பாடுவேன்; ஏனெனில், மாட்சியுடன் வெற்றி பெற்றார்.
விப 15: 1. 2. 3-4. 5-6
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்;
குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். -பல்லவி
2 ஆண்டவரே என் ஆற்றல்;
என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள்.
அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.
அவரே என் மூதாதையரின் கடவுள்;
அவரை நான் ஏத்திப் போற்றுவேன். -பல்லவி
3 போரில் வல்லவர் ஆண்டவர்;
`ஆண்டவர்' என்பது அவர் பெயராம்.
4 பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்;
அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். -பல்லவி
5 ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்;
ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.
6 ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது;
ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42
அக்காலத்தில் மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, ``போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்'' என்றனர். அதற்கு அவர் கூறியது: ``இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
"இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!...
இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!" (மத்தேயு 12:41-42)
இயேசு தம்மை யோனா இறைவாக்கினருக்கும் சாலமோன் மன்னருக்கும் ஒப்பிட்டுப் பேசியதோடு அவர்களைவிடத் தம்மைப் பெரியவராகக் காட்டுகிறார். விவிலிய வரலாற்றில் யோனாவுக்குச் சிறப்பிடம் உண்டு. கடவுளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கு எவ்வளவோ முயன்றார் யோனா. ஆனால் கடவுள் அவரை விடவில்லை. யோனாவைத் தேடிச்சென்று கண்டுபிடித்து அவரை நினிவே நகருக்கு அனுப்பி அங்கிருந்த பிற இன மக்கள் கடவுளிடம் திரும்பிவர யோனா ஒரு கருவியாகச் செயல்பட்டார். சாலமோன் மன்னர் தலைசிறந்த ஞானியாகப் போற்றப்பெறுபவர். அவருடைய ஞானம் மிகுந்த சொற்களைக் கேட்க வெகுதொலையிலிருந்து மக்கள் வந்தனர். இந்த இருவரோடும் இயேசு தம்மை ஒப்பிட்டது எதற்காக? இயேசு கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் அனைவரையும்விட தலைசிறந்த இறைவாக்கினர். ஏனென்றால் அவர் கடவுளின் செய்தியை, கடவுளாட்சி பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தார். மேலும், இயேசு இவ்வுலகில் தோன்றிய ஞானியர் அனைவரையும் விஞ்சியவர். ஏனென்றால் அவர் இவ்வுலக ஞானத்தையல்ல, கடவுளின் ஞானத்தை நமக்கு அறிவித்தார்.
கடவுளின்ஞானம் மனிதருக்கு மடமையாகப் படலாம். கடவுளின் அழைப்பு மனிதருக்கு முரணாகத் தெரியலாம். ஆனால், திறந்த உள்ளத்தோடு கடவுளை நாம் அணுகிச் சென்றால் அவருடைய குரலை நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் கேட்க முடியும். அதுபோல, கடவுளின் ஆவியால் நாம் நடத்தப்பட்டால் அவருடைய ஞானத்தில் நமக்கும் பங்குண்டு. ஒப்புயர்வற்ற இறைவாக்கினரும் ஞானியுமாகிய இயேசுவைப் பின்செல்வோர் இறைவாக்கினை ஏற்று, கடவுளின் ஞானத்தைப் பெற்ற மனிதராக வாழ வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, நீர் எங்களுக்கு அளித்துள்ள இறைவாக்குப் பணியை நாங்கள் ஞானத்துடன் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.
|