முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 15வது வாரம் சனிக்கிழமை 2021-07-17
முதல் வாசகம்
எகிப்து நாட்டினின்று இஸ்ரயேல் மக்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே!
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 37-42
அந்நாள்களில் இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர். மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை என்று பெருந் தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன. எகிப்திலிருந்து கொண்டு வந்த பிசைந்த மாவைக் கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில் மாவு இன்னும் புளிக்காமல் இருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற் போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை! எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்! நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவு பெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது. எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாட வேண்டிய இரவும் இதுவே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்
திருப்பாடல்கள் 136: 1,23-24. 10-12. 13-15
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர், என்றும் உள்ளது அவரது பேரன்பு. 23 தாழ்வுற்றிருந்த நம்மை நினைவுகூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 24 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி
10 எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 12 தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி
13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 15 பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.
நற்செய்தி வாசகம்
.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21
அக்காலத்தில் பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.
இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின: ``இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|