யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-07-16




முதல் வாசகம்

மாலை மங்கும் வேளையில் ஆட்டினை வெட்ட வேண்டும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 11: 10-12: 14

அந்நாள்களில் மோசேயும் ஆரோனும் அருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன் முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை! எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: ``உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக் கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல் தலை, கால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள். அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்க வேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பில் சுட்டெரியுங்கள். நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது `ஆண்டவரின் பாஸ்கா'. அதாவது: ஆண்டவருடைய கடத்தல். ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்கு வரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின் மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.
திருப்பாடல்கள் 116: 12-13. 15-16. 17-18

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8

அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், ``பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்'' என்றார்கள். அவரோ அவர்களிடம், ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா? மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

பசியும், பாவமும் !

பசியாய் இருந்த தம் சீடர்கள் ஓய்வுநாளன்று கதிர்களைக் கொய்து தின்றதை இயேசு நியாயப்படுத்தும் காட்சியை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குக் காட்டுகிறது. "பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்" என்னும் முதுமொழியை இயேசுவின் சீடர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். பசியின் காரணமாக ஒய்வுநாள் சட்டத்தை மீறுவது தவறல்ல என்று வாதிடுகிறார் இயேசு. அதுமட்டுமல்ல, தமது வாதத்துக்கு ஆதாரமாக தாவீதையே மேற்கோள் காட்டுகிறார். மேலும், "கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்" எனச் சொல்லி இன்னொரு வாதத்தையும் முன் வைக்கிறார் இயேசு. இயேசுவோடு இருக்கும்போது அங்கே தவறு நடக்க வாய்ப்பில்லை, இயேசுவின் அனுமதியோடு செய்வது குற்றமல்ல என்பது அதன் பொருள். இந்த நேரத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி "களவு செய்யாதிருப்பாயாக" என்னும் ஏழாவது கட்டளைக்குத் தரும் விளக்கம் நம் கவனத்தை ஈர்க்கிறது. பசியைப் போக்குவதற்காக உணவை எடுப்பது ஒரு பாவமல்ல என்கிறது மறைக்கல்வி. இந்த துணிச்சலான திருச்சபையின் போதனை இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டதே. காரணம், "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்னும் இயேசுவின் போதனையைத் திருச்சபை நன்கு உள்வாங்கியிருக்கிறது.

மன்றாட்டு:

ஆண்டவராகிய இயேசுவே, பசி, நோய், கடன்.. போன்றவை காரணமாக மக்கள் செய்யும் செயல்களைக் குற்றங்களாகப் பார்க்காத, பரிவின் பார்வையை எங்களுக்குத் தந்தருளும், ஆமென்.