முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 15வது வாரம் புதன்கிழமை 2021-07-14
முதல் வாசகம்
ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-6, 9-12
அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
``ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்'' என்று மோசே கூறிக்கொண்டார். அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார்.
`மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் ``இதோ நான்'' என்றார். அவர், ``இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்'' என்றார்.
மேலும் அவர், ``உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே'' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.
அப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.'' மோசே கடவுளிடம், ``பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?'' என்றார்.
அப்போது கடவுள், ``நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே'' என்றுரைத்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திருப்பாடல்கள் 103: 1-2. 3-4. 6-7
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி
3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி
6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27
அக்காலத்தில் இயேசு கூறியது: ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
இயேசுவின் இறைபுகழ்ச்சி !
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் செபங்களுள் ஒன்றினைத் தருகிறது. நாம் எப்படி செபிக்க வேண்டும் எனக் கற்றுத் தருகிறது இந்தச் செபம். 1. முதலில் இது ஓர் இறைபுகழ்ச்சி செபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தை இறைவனைப் போற்றுகிறார் இயேசு. நமது செபத்தில் இறைபுகழ்ச்சி இடம் பெறுகிறதா என ஆய்வுசெய்வோம். இறைவனைப் போற்றுதல் இல்லாத செபம் நிறைவற்றது. எனவே, இறைவனை, இயேசுவை, தூய ஆவியாரைப் போற்றுவோம். 2. இரண்டாவதாக, இது தன்னலமற்ற இறைபுகழ்ச்சி. நமது வாழ்வில் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்காக இறைவனைப் போற்றுவதும் இறைபுகழ்ச்சிதான். (அதையும் செய்யாமல் எத்தனைபேர் இருக்கிறோம்?). ஆனால், அதைவிட மேலான இறைபுகழ்ச்சி இறைவனை மையப்படுத்தியது. இங்கே இயேசு இறைவனின் திருவுளத்திற்காக தந்தையைப் போற்றுகிறார். 3. மூன்றாவதாக, இது எளியோர் சார்பான இறைபுகழ்ச்சி. ஆம், குழந்தைகள், மற்றும் குழந்தைகளைப் போன்றவர்களுக்கு இறைவன் தமது திருவுளத்தை வெளிப்படுத்த விருப்பம் கொண்டதற்காக இயேசு இறைவனைப் போற்றுகிறார். "வலியோரை வீழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்தும்" இறைவனின் பெருமைகளைப் புகழ்ந்த அன்னை மரியாவின் பாடலை இச்செபம் நினைவுபடுத்துகிறது. நாமும் நமது வேண்டுதல்களில் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, தன்னலமற்ற, எளியோர் சார்பான இறைபுகழ்ச்சி செபங்களை இணைத்துக்கொள்வோமாக!
மன்றாட்டு:
அன்புத் தந்தையே இறைவா, நீர் எளியோரின் சார்பாக செயலாற்றுவதற்காக உம்மைப் போற்றுகிறோம். இயேசுவைப் போல, நாங்களும் தன்னலமற்ற வகையில் உம்மை வழிபட அருள்தாரும், ஆமென்.
|