யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-07-09




முதல் வாசகம்

உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!
தொடக்க நூலிலிருந்து வாசகம் 46: 1-7,28-30

அந்நாள்களில் இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, `யாக்கோபு! யாக்கோபு!' என்று அழைத்தார். அவர், `இதோ அடியேன்' என்றார். கடவுள், ``உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே. எகிப்திற்குச் செல்ல நீ அஞ்சவேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்'' என்றார். யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள். யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்துகொண்டு வெகுநேரம் அழுதார். அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், ``இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
திருப்பாடல்கள் 37: 3-4. 18-19. 27-28. 39-40

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி

18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். 19 கேடு காலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள். பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: ``இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

துன்புறும் சகோதரருக்காக!!

இயேசுவின் சீடர்கள் சந்திக்க வேண்டிய சங்கடங்களை, சவால்களை, இன்னல்களை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டார். அவரது சீடர்கள் என்பதற்காக எத்தனையோ துன்பங்களைக் கடந்த 21 நுhற்றாண்டுகளாகத் திருச்சபை சந்தித்து வந்திருக்கின்றது. உலகின் பல பகுதிகளிலும் இன்றும்கூட இயேசுவின் சீடர்களுக்கு நேரும் துன்பங்கள் சொல்ல முடியாதவை. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பேரிடர்கள் நாம் அறிந்ததே. அங்கே உள்ள பெரும்பான்மையான மக்கள் பழங்குடியினர், ஆதிவாசிகள், பாமரர்கள். கிறிஸ்தவர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக வீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு ஓட நேர்ந்தது. அவர்களில் பலரும் இன்னும்கூட அரசின் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தி. கடந்த வாரம் அவர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களைத் தங்களது ஊருக்குத் திரும்ப ஊக்குவித்திருக்கிறார். இன்றைய நாளில் அவர்களுக்காகவும், இன்னும் உலகம் முழுவதும் இயேசுவின் திருப்பெயருக்காகத் துன்பங்களைச் சந்திக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்காகவும் மன்றாடுவோமா!

மன்றாட்டு:

ஆறுதலின் ஊற்றே இயேசுவே, இந்த நாளில் ஒரிசாவிலும், உலகின் இதரப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைத் தாங்கியிருப்பதனால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் எம் சகோதர, சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போர் மீட்கப்படுவர் என்று சொன்னீரே. இவர்களுக்கு மன உறுதியையும், மீட்பையும், விடுதலை அனுபவத்தையும் வழங்கியருளும். மத சுதந்திரத்தோடு வாழ்கிற நாங்கள் துன்புறும் எம் சகோதர, சகோதரிகளுக்கு ஆறதலும். உதவிகளும் வழங்க எங்களை ஆசிர்வதியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.