யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் திங்கள்கிழமை
2021-07-05




முதல் வாசகம்

நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்."
தொடக்கநூலில் இருந்து வாசகம்28;10-12

10 யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, கரானை நோக்கிச் சென்றான். 11 அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான். 12 அப்போது அவன் கண்ட கனவு இதுவே; நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். 13 ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, "உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே. நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன். 14 உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன. 15 நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டான்" என்றார். 16 யாக்கோபு தூக்கம் தெளிந்து, "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்" என்று 17 அச்சமடைந்து, "இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்" என்றார். 18 பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து, 19 "லூசு" என்று வழங்கிய அந்த நகருக்குப் "பெத்தேல்" என்று பெயரிட்டார். 20 மேலும் அவர் நேர்ந்து கொண்டது; "கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து, 21 என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார். 22 மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்
திருப்பாடல்கள் 91;1-4,14-15

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.பல்லவி

2 ஆண்டவரை நோக்கி, "நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்" என்று உரைப்பார் பல்லவி

3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். பல்லவி

4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்பல்லவி

.14 'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்;பல்லவி

15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்;பல்லவி

அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்



நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்9;18-26

18அக்காலத்தில் யேசு தம் சீடர் இயேசு சீடர்களோடு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்" என்றார். 19 இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். 20 அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். 21 ஏனெனில் அப்பெண், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்" எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார். 22 இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, "மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். 23 இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். 24 அவர், "விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். 25 அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள். 26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம் !

நேற்று லுhக்க நற்செய்தியில் வாசித்த அதே பகுதியை இன்று மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசிக்கிறோம். தன்னைப் பின்பற்ற விரும்பும் இளைஞனுக்கு இயேசு கொடுக்கும் அறிவுரை, ‘இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்’. உண்மையில், அந்த இளைஞன் இயேசுவிடம் வேண்டுவது, தந்தை இறக்கும் வரையில் அவரைப் பராமரித்துவிட்டு, அதன்பின் இயேசுவைப் பின்தொடர அனுமதி. ஆனால், இயேசுவின் பார்வை வேறாக இருக்கிறது. ஏன் அழைத்தலை ஏற்பதை ஒத்தி வைக்கவேண்டாம். நாள் ஆக ஆக, எண்ணங்கள் மாறலாமே? ஏற்றி வைத்த அழைத்தல் என்னும் அகல் விளக்கு அணைந்துவிடலாமே? எனவேதான், அழைத்தலை உடனே ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. நமது குடும்பங்களில், பங்குகளில் இளையோர் அழைத்தலில் ஆர்வம் காட்டினால் அவர்களை உடனே ஊக்குவிப்போம். காலம் தாழ்த்தும்போது, அழைத்தலை இழக்க நேரிடலாம்.

மன்றாட்டு:

இயேசுவே, அழைத்தலின் நாயகனே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய இளையோருக்;காக வேண்டுகிறோம். உமது விருப்பத்திற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் இளையோரைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பண வாழ்வை அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.