யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-07-04

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 2: 2-5,பதிலுரைப்பாடல்: திபா. 123: 1-4,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்: 12:7-10,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறை அருளால் ஆண்டின் பொதுக்காலம் 14 ஆம் வாரத்தில் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கம் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

நீங்களும் நானும் இறைமகன் அருளால் ஒரு உயர் நிலையை அடைந்து நிற்கிறோம் என்ற உணர்த்துதல் இன்று நமக்கு தரப்படுகிறது. நமக்கு நல்லது செய்ய, அல்லது நல்லது சொல்ல என்று இறைவன் அன்றாடம் பலரை நம்மிடம் அனுப்புகிறார். நமக்காக இறைவனால் அனுப்பப்படும் அவர்களை நாம் எவ்வாறு எதிர்கொள்ளுகிறோம். அதுபோல நல்லது செய்ய பலரிடம் நம்மை அனுப்புகிறார். நாம் அவர்களிடம் நம்மை அனுப்பிய இறைவன் சார்புடையவராய் பேசுகிறோமா? செயல்படுகிறோமா?.

எனவே இனிமையானவர்களே இன்று இத் திருப்பலியில் பங்கேற்கும் நாம் 3 உறுதிமொழிகளை நமதாக்கிக் கொள்வோம்: இறைத் தூதராய் வாழ்வோம், என்ன நிகழ்ந்தாலும் உறுதியாய்ப் பணியாற்றுவோம். இறைத் திருவுளமே நம் இலக்கு எனக் கொள்வோம். - இவற்றை நம் வாழ்வில் செயல்படுத்த முனைவோம். தொற்றுநோய் விரைவில் மறைந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 2: 2-5

அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது: அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், "மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர் " என்றார். "வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
பதிலுரைப்பாடல்: திபா. 123: 1-4

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியு ள்ளேன். பல்லவி:

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவு ளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியி ருக்கும். பல்லவி:

எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்: அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசை மொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். பல்லவி:

இரண்டாம் வாசகம்

நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்: 12:7-10

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் " என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது: ஏழைகளு க்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ;இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? " என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் " என்றார்.அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நம்பிக்கை தருபவராம் இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் நம்பிக்கையால் நீர் அளிக்கும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும், திருச்சபையின் மக்கள் அனைவரும் வாழ்வுபெறச் செய்யவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

நீர் ஒரு தச்சராகப் பணி செய்து, உழைப்பவர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர். நானும் பிறரின் உழைப்பை மதிக்கவும், உடல் உழைப்பில் ஈடுபடுவோர்மீது அக்கறை கொள்ளவும் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இயேசுவே,

நீர் எங்களுக்குக் கொடையாகத் தந்திருக்கிற எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக, உடன் பிறப்புகளுக்காக, உடன் உழைப்பாளர்களுக்காக, நண்பர்கள், தோழியருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழ்கின்ற, உழைக்கின்ற அவர்களைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், மதிக்கவும், ஊக்குவிக்கவும் எங்களுக்கு அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா!

புலம்பெயந்து துன்புரும் எல்லாநாட்டு மக்களையும் கண்நோக்கியருளும். அவர்களுக்கு அடைக்கலம் தரும் நல்ல உள்ளத்தையும், மனிதநேயத்தையும் தந்து, அம்மக்களை ஆதரிக்க உலகநாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவும், வாழ்வும், வளமும், ஏற்றமும் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரையும் ஆதரிக்கும் தந்தையே எம் இறைவா!

ஏழைகள், கைவிடப்பட்டோர், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோரை கண்டு அவர்களுக்கு உதவிட தங்கள் உழைப்பாலும், பொருளாதார உதவியாலும் வாழ்வில் மகிழ்வு, உடல்நலமும் பெற்று அமைதியான வாழ்க்கை அளித்திட இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்களை பாதுகாக்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமுள்ள எம் இறைவா!

உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். கோவிட் தொற்றுநோய் காரணமாக நாங்கள் அதிகமான அருள்பணியாளர்களையும், அருட்சகோதரிகளையும் இழந்துவிட நிலையில் மேலும் இந்நிலை தொடராமல் இருக்க உம்மை மன்றாடுகிறோம். அனைவருக்கும் அரணாகவும் கோட்டையாக இருந்து அவர்களை பாதுகாக்க தேவையான வரங்களை அருள வேண்டுகிறோம்.

நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா!

உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் மற்றும் தொற்றுநோயால் மரித்த அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இவர் தச்சர் அல்லவா”!

மாற்கு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடைக்கம் ஓர் அபூர்வமான செய்தி இது. பிற நற்செய்தியாளர்கள் இயேசு தச்சரின் மகன் என்பதைப் பதிவு செய்திருக்கும்போது, மாற்கு மட்டுமே இயேசுவும் ஒரு தச்சர் என்று எழுதியுள்ளார். இயேசு தன் முப்பதாவது வயதில் பணிவாழ்வைத் தொடங்கும் முன், தன் குடும்பத்தில் ஓர் உழைப்பாளியாக, தன் தந்தையின் தொழிலாகிய தச்சுத் தொழிலையே செய்து வந்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மாற்கு அதனைப் பதிவு செய்துள்ளார். ஆம், இயேசு ஒரு தச்சர், உழைப்பாளி. உழைப்பின் மேன்மையை அனுபவமுறையில் அறிந்தவர்.

இந்தத் தகவல் நம் உள்ளங்களில் பல எண்ணங்களை மலரச் செய்கிறது. .

1. இறைவன் உழைப்பை மேன்மைப்படுத்துகிறார். நாம் உழைக்க வேண்டும். உழைக்காதவர் உண்ணலாகாது. .

2. எந்தத் தொழிலும் இழிவானது அல்ல. நேர்மையுடன் செய்யப்படும் எந்தத் தொழிலும் இறைவனுக்கு ஏற்றதே. .

3. ஒரு மனிதரை அவர் செய்யும் தொழிலைக் கொண்டு மதிப்பிட்டு, இழிவு படுத்தாமல், அவரது பண்புகள், இயல்புகளுக்காக அவரை மதிக்க வேண்டும். .

4. உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள்தான் பிறரின் சுமைகளை உணர முடியும். சுமை சுமந்து சோர்ந்திருப்போர், வாருங்கள் என்று இறைப்பாறுதல் தரமுடியும். உழைப்பவர் மட்டுமே உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிய முடியும். இன்றைய நாளில் உழைப்பாளிகள் பற்றிய நம் பார்வையை ஆழப்படுத்திக்கொள்வோம்.

மன்றாட்டு:

உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் ஒரு தச்சராகப் பணி செய்து, உழைப்பவர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர். நானும் பிறரின் உழைப்பை மதிக்கவும், உடல் உழைப்பில் ஈடுபடுவோர்மீது அக்கறை கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.