யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் புதன்கிழமை
2021-07-03

புனித தோமா திருத்தூதர்
முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 52-7-10

. 7 நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, "உன் கடவுள் அரசாளுகின்றார்" என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! 8 இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். 9 எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். 10 பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
திருப்பாடல்கள் 117: 1. 2

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்

`நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்''

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப் பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

இறை நம்பிக்கையே எல்லாச் சூழலிலும் மனிதனை வாழவைப்பது.

"அறிவியல் அறியாத சமயம் முடமானது, சமயமற்ற அறிவியல் முடமானது". இந்த உண்மைக்கு அன்றே வித்திட்டவர் இன்றைய புனிதர், திருத்தூதர் தோமா. விசுவாசத்தின் அடித்தளம் அறிவியல். எல்லா மறை உண்மைகளுக்கும் அறிவியல் அடித்தளம் உண்டு என்பதை அன்றே நம் புனிதர் தெளிவுபடுத்தியுள்ளார். அறிவியல் அடித்தளத்தில் உருவாகும் மறை உண்மைகள் இறையியலில் வளர்ச்சிபெற்று,அறிவெல்லாம் கடந்த விசுவாசத்தில் முழுமையடைகின்றது."அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்ற அறிவியல் ஆய்வு மனப்பான்மை இந்த உண்மையைத்தானே உணர்த்துகிறது. இறுதியில் "நீரே என் ஆண்டவா!;, நீரே என் கடவுள!;" என்ற இந்த விசுவாச ஆர்ப்பரிப்பு, அறிவியலில் தொடங்கி, இறையியலில் வளர்ந்து,விசுவாசத்தில் உச்சநிலை அடையும் உன்னதமான விசுவாசமாகும்.கத்தோலிக்கத் திருச்சபையின் எல்லா விசுவாச உண்மைகளுக்கும் அறிவியலே தொடக்கம், அடித்தளம் என்ற உண்மைக்குச் செயல்வடிவம் கொடுத்தவர் புனித தோமையார். விசுவாசம் அந்தரத்தில தொங்குவதல்ல, வானத்திலிருந்து விழுந்ததல்ல, கட்டுக்கதையல்ல. கற்பனையல்ல மூட நம்பிக்கையல்ல, முரட்டு வாதமும் அல்ல. இத்தகைய அறிவுப்ப+ர்வமான வசுவாசம் வாழ்வில் கலக்கும்போதுதான் வாழ்வு உயிரோட்டமாகிறது. அறிவியல் ஆட்கொள்ளும் இன்றைய மனித வாழ்வு இறைமயமாகிறது, தெய்வீகமாகிறது. புனித தோமையே! உம் வழிகாட்டுதலுக்கு எம் நன்றி. நீர் காட்டும் பாதையில் நடக்க உதவும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் எழுகின்ற கொந்தளிப்பைப் போக்கி உமது அமைதியை அளித்தருளும்.