முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 12வது வாரம் சனிக்கிழமை 2021-06-26
முதல் வாசகம்
ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15
அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்க கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள் முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, ``என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்'' என்றார். ``நீ சொன்னபடியே செய்'' என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, ``விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு'' என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, `` உன் மனைவி சாரா எங்கே?'' என்று கேட்க, அவர், ``அதோ கூடாரத்தில் இருக்கிறாள்'' என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், ``நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. எனவே, சாரா தமக்குள் சிரித்து, ``நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?'' என்றாள். அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, `` `நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்று சொன்னார். சாராவோ, ``நான் சிரிக்கவில்லை'' என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், ``இல்லை, நீ சிரித்தாய்'' என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்.
லூக் 1: 47. 48-49. 50,53. 54-55
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. பல்லவி
48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். பல்லவி
50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். 53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். பல்லவி
54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17
அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ``ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ``நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார்.
நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ``ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார்.
இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்'' என்றார்.
பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, ``நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்'' என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.
இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின.
மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, 'ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்துவைக்க நான் தகுதியற்றவன்.
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்' என்றார்'' (மத்தேயு 8:8)
திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது நற்கருணை உட்கொள்வதற்கு முன், ''ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்'' என நாம் கூறுகின்ற சொற்கள் நற்செய்தியில் வருகின்ற இயேசுவின் ஒரு புதுமையை அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கப்பர்நாகுமுக்குச் செல்கிறார். அப்போது பிற இனத்தவராகிய உரோமையரைச் சார்ந்த ஓர் அதிகாரி அவரை அணுகுகிறார். பாலஸ்தீனப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உரோமைக் காவல் படையினர் நூறு பேருக்கு அவர் தலைவர். எனவே அவருடைய பதவிப் பெயர் ''நூற்றுவர் தலைவர்'' என்பதாகும். இந்த அதிகாரி தம் பணியாள் (அல்லது அவருடைய ''குழந்தை'') நோய்வாய்ப்பட்டிருப்பதாக இயேசுவிடம் கூறுகிறார். இயேசு நினைத்தால் பணியாளுக்கு நலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை அந்த அதிகாரியிடம் இருந்தது. பிற இனத்தாரோடு யூதர் பழகுவதில்லை. ஆனால் இயேசுவோ அந்த அன்னியராகிய அந்த உரோமை அதிகாரியைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, அவருடைய வீட்டுக்குச் சென்று பணியாளரைக் குணப்படுத்தப் போவதாக இயேசு கூறுகிறார். அப்போது நூற்றுவர் தலைவர் இயேசுவைப் பார்த்து, ''ஐயா, நான் தகுதியற்ற மனிதன்'' என்று கூறி, இயேசு ஒரு வார்த்தை சொன்னால் போதும், தன் பணியாள் குணமாவார் என்கிறார்.
இச்சொற்களைக் கேட்ட இயேசு அந்த அதிகாரியின் ஆழ்ந்த நம்பிக்கையைப் போற்றுகிறார். இஸ்ரயேலரிடம்கூட அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை இல்லையே என இயேசு வருத்தத்தோடு கூறுவது நம் காதுகளில் விழுகிறது (காண்க: மத் 8:10). பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டு, அவர்களும் இறையாட்சியில் பங்குபெற வருவர் என்பதை இயேசு இச்செயல்வழியாகக் காட்டுகிறார் (காண்க: எசா 2:2-4; மீக் 4:1-4; செக் 8:20-23). எனவே உலகின் எத்திசையிலுமிருந்து மக்கள் வந்து இறையாட்சியில் பங்கேற்பர். இதை இயேசு ''விருந்து'' என்னும் உருவகம் வழியாக எடுத்துக் கூறுகிறார் (மத் 8:11). வழக்கமாக இயேசு நோயாளரை நேரடியாகச் சந்தித்து அவர்களைக் குணமாக்குவார். இங்கோ அவர் நோயாளரின் அருகே செல்லாமலே, தொலையிலிருந்துகொண்டே குணமளிக்கிறார். இதில் இயேசுவின் ''அதிகாரம்'' (மத் 8:9) வெளிப்படுகிறது. ஒருவேளை பிற இனத்தாராகிய நூற்றுவர் தலைவரின் வீட்டுக்குள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டுவிடலாம் என்பதற்காக இயேசு அங்குச் செல்லவில்லையோ என சில அறிஞர் கருதுகின்றனர். கடவுளின் முன்னிலையில் நாம் தகுதியற்றவர்களாகவே உள்ளோம். ஆனால் அவரே முன்வந்து, இயேசு வழியாக நம்மைத் தம்மோடு ஒன்றுபடுத்துகிறார். இந்த உறவு என்னும் அருள்கொடையை நாம் நன்றியோடு ஏற்று எந்நாளும் இறைபுகழ் பாடிட வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, தகுதியற்ற எங்களை உம் பிள்ளைகளாக நீர் ஏற்றதற்கு நன்றி.
|