யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2021-06-20

(இன்றைய வாசகங்கள்: யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11,திருப்பாடல் 107: 23-24. 25-26. 28-29. 30-31,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் மிகவும் இனிமையானவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 12 ஆம் வார இறைவழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் இறை ஆற்றல் முழுமையாக ஆட்கொள்ள அன்புடன் வாழ்த்துகிறேன்.

”அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ” என்னும் அழைப்பு இன்று நம் காதுகளில் இறைவார்த்தைகள் ஊடாக ஒலிக்கிறது. நீங்கள் உழைப்பையே வாழ்வுநிலையாக மாற்றிக்கொண்டவரா? ஓய்வின்றி வேலை செய்பவரா? உங்கள் குடும்பத்தினருடன், நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவழிப்பதற்குக்கூட உங்களுக்கு நேரமில்லாதபடி பணியாற்றுகின்றீர்களா? அப்படியென்றால், அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் என்னும் அழைப்பு உங்களுக்குத்தான். உழைத்தது போதும். ஓடி, ஆடி வேலை செய்தது போதும். உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. உங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க, உறவாட, தனிமை தேவைப்படுகிறது. அக்கரைக்குச் செல்லுங்கள். உறவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ” என்னும் அழைப்பு எங்களுக்குத்தான். இன்றைய திருப்பலி வழியாக அக்கரைக்குச் செல்ல இயேசு தந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம். எல்லாப் பணிகளுக்கு மத்தியிலும் இயேசுவுக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, தனித்திருக்க, உறவை மேம்படுத்த அருள்வேண்டி இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.முதல் வாசகம்

உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!
யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்: ``கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடிய பொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி `இதுவரை வருவாய், இதற்கு மேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!' என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 107: 23-24. 25-26. 28-29. 30-31

சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர். 24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். பல்லவி

25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. 26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. பல்லவி

28 தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். 29 புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. பல்லவி

30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். 31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! பல்லவி

இரண்டாம் வாசகம்

பழையன கழிந்து புதியன புகுந்தன.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார். ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

ஒரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ``அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்'' என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ``போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ``இரையாதே, அமைதியாயிரு'' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, ``ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ``காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!

உலகெங்கும் நற்கருணைப் பலியை நிறைவேற்றும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் அனைவரும், கிறிஸ்துவின் மறைபொருளான பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், இறைமக்களை விசுவாச வாழ்வில் வளரச்செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா!

உம்முடைய மக்களாகிய எங்களுக்கும்: உம்முடைய நெறிமுறைகளைப் பின்பற்றி, உம்மீது விசுவாசம் கொண்டு, உம்முடைய வார்த்தையின்படி நீதிமான்களாக வாழும் நன்மனதை அளித்தருள வேண்டுமென்றும், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும், உண்மைத்தன்மையையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் மனம் தர வேண்டுமென்றும், உம்முடைய மக்களாகிய நாங்களும்: உமது ஆவியால் இயக்கப்பட்டு, உமது கட்டளைகளுக்குப் பணிந்து நடந்து உம் சீடர்களாக வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அழைத்தலின் நாயகனே இயேசுவே,

அக்கரைக்குச் செல்ல நீர் தந்த அழைப்புக்காக நன்றி. எல்லாப் பணிகளுக்கு மத்தியிலும் உமக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, தனித்திருக்க, உறவை மேம்படுத்த அருள் தாரும். சிறிய கடுகு விதையாக ஊன்றப்பட்டு, உலகெங்கும் செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் திருச்சபையின் மக்கள் அனைவரும், இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும், உலகில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் இறையாட்சியின் தூதுவர்களாக செயல்படவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உறைவிடம் தருபவராம் இறைவா,

உம்மை அறியாத எம் நாட்டு மக்கள் அனைவரும் நீர் நட்டு வளர்த்த திருச்சபையில் உறைவிடம் தேடவும், உமது ஆட்சியை ஏற்றுக்கொண்டு உண்மைக்கு சான்றுபகர்பவர்களாக வாழவும் தூண்டுதல் அளிக்க வேண்டுமென்றும், இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்று மையிலும் வாழவும் உதவ வேண்டுமென்றும், குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பு இறைவா,

நல்ல பெற்றோர்களாக நாங்கள் வாழ்ந்து, எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நல்ல முன் மாதிரியாகத் திகழ்ந்து, ஆன்மிக வாழ்விலும், அருள் வாழ்விலும் எங்கள் குழந்தைகள் வளர்ந்திட உமதுஅருள் வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமுள்ள எம் இறைவா!

உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். கோவிட் தொற்றுநோய் காரணமாக நாங்கள் அதிகமான அருள்பணியாளர்களையும், அருட்சகோதரிகளையும் இழந்துவிட நிலையில் மேலும் இந்நிலை தொடராமல் இருக்க உம்மை மன்றாடுகிறோம். அனைவருக்கும் அரணாகவும் கோட்டையாக இருந்து அவர்களை பாதுகாக்க தேவையான வரங்களை அருள வேண்டுகிறோம்.

நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா!

உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் மற்றும் தொற்றுநோயால் மரித்த அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, 'இரையாதே, அமைதியாயிரு' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மாற்கு 4:39)

இயேசு புரிந்த புதுமைகள் பல உண்டு. அவை பெரும்பாலும் மனிதருக்கு நலம் அளிக்கவே செய்யப்பட்டன. பசியால் வாடியவர்களுக்கு உணவளிக்கவும், தீய ஆவியால் பீடிக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்கவும், முடக்குவாதமுற்றவர்க்கு நலமளிக்கவும், பார்வையற்றோருக்கு மீண்டும் கண்பார்வை கொடுக்கவும், ஏன், இறந்தோருக்கு உயிரளிக்கவும் இயேசு புதுமைகள் செய்தார். ஓங்கி எழுந்த புயலை இயேசு அடக்கியதும் தம் சீடர்களை ஆபத்திலிருந்து காத்திடவே. சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். எங்கே படகு கவிழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினார்கள். ஆனால் இயேசு அவர்கள் நடுவே இருந்தததை அவர்கள் மறந்துவிட்டார்கள். இயேசு அவர்களது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொண்டார். ''ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார் (மாற் 4:40).

கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்னும் ஆழ்ந்த உறுதிப்பாடு நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். துன்பங்கள் புயல் போல எழலாம். கவலைகள் கடல் அலைபோல நம்மை மூழ்கடிக்க வரலாம். ஆனால் இயேசுவின் உடனிருப்பு அந்த ஆபத்துக்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ''இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்'' என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 4:38). ஆனால் இயேசுவுக்கு வல்லமையளித்த கடவுள் ஒருபோதும் தூங்குவதில்லை. அவருடைய கண்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. அவருடைய பார்வையிலிருந்து நாம் ஒருபோதுமே அகன்று போய்விடுவதில்லை. கடவுளின் அன்புக் கரங்களில் நாம் தவழ்வதால் நம்மை எவ்வித ஆபத்தும் அணுகாது. அவ்வாறு ஆபத்து எழுகின்ற வேளையில் அவர் நம்மைப் பாதுகாக்க விரைந்து வருவார். திருச்சபை என்னும் மக்கள் குழுவை ஒரு படகுக்கு ஒப்பிடுவது வழக்கம். படகு பயணம் போகின்ற வேளையில் புயற்காற்றும் அலையும் எழுந்து அதைப் பயமுறுத்தலாம். ஆனால் நம்மோடு என்றும் இருப்பதாக நமக்கு வாக்களித்த இயேசு நம்மைக் கைவிடமாட்டார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்கள் குழுவாகிய தம் திருச்சபைக் குடும்பத்தை அவர் கைவிட மாட்டார் என்னும் உறுதி நமக்கு உண்டு. ''உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என இயேசு இன்றும் நம்மை நோக்கிக் கேட்கின்றார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியருளும்.