மூன்றாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 9வது வாரம் சனிக்கிழமை 2021-06-12
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம்
முதல் வாசகம்
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்;
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 9-11
எருசலேமின் வழிமரபினர் பிற இனத்தாரிடையேயும், அவர்கள் வழித் தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள். ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர் மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும் ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!
1 சாமு 2: 1. 4-5. 6-7. 8
1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!
என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். -பல்லவி
4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார்
ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! -பல்லவி
6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்;
7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார். -பல்லவி
8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்!
உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
இறைவனின் வார்த்தையைத் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த மரியா பேறுபெற்றவர்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒரு நாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர் களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ``மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், ``நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''பின்பு இயேசு தம் பெற்றோர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்'' (லூக்கா 2:51)
இயேசு தம் தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார். அதாவது, தந்தையின் விருப்பப்படி நடப்பதே இயேசுவின் வாழ்க்கை முறையாக இருந்தது. ஏனெனில் அவர் தந்தையோடு எந்நாளும் இணைந்திருந்தார். இந்த இயேசு தம் பெற்றோராகிய யோசேப்பு, மரியா ஆகிய இருவருக்கும் கூட ''பணிந்திருந்தார்'' என்பதன் பொருள் என்ன? முதன்முதலில் இங்கே நாம் காண்பது இயேசுவின் மனிதப் பண்பு. அவர் கடவுளின் மகனாக இருந்த போதிலும் மனிதருள் ஒருவராக மாறினார்; மனிதப் பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார். எனவே இயேசு தம் தாய் மரியாவுக்கும், வளர்ப்புத் தந்தை யோசேப்புக்கும் பணிந்திருந்தார். பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை இயேசுவின் வாழ்க்கை முறையாகவும் இருந்தது. பழைய ஏற்பாட்டு ஆன்மிகம் இயேசுவின் ஆன்மிகமாகத் துலங்கியது. பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்னும் பழைய ஏற்பாட்டுக் கட்டளையை இயேசுவும் கடைப்பிடித்தார் (விப 20:12 - ''உன் தந்தையையும் தாயையும் மதித்து நட'').
பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்திருக்க வேண்டும் என்னும் கட்டளை இரு வேறு விதங்களில் தவறாக விளக்கப்பட்டு வந்துள்ளது. முதலில், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை மேற்கோள் காட்டிச் சிலர் குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துகின்ற போக்கு ஆங்காங்கே உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. ஏனென்றால், மனிதர் பெரியவராயினும் சரி, சிறியவராயினும் சரி, அவர்களுக்குக் கடவுளே வழங்குகின்ற மனித மாண்பு உண்டு. அதை யாரும் அழித்துவிடவோ எடுத்துவிடவோ இயலாது. சிறுவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவற்றை யாரும் மீறலாகாது. இரண்டாவது, பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் காட்ட வேண்டிய கீழ்ப்படிதல் ஒரு நாளும் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக அமையலாது. இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகளில் ஒன்று அவர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், தம் சொந்த விருப்பப்படி நடக்கலாமே என்பது (மத் 4:1-11). இயேசு அச்சோதனைக்கு இடம் கொடுக்கவில்லை. கடவுளுக்கு மட்டுமே நம் உள்ளார்ந்த பணிதலும் கீழ்ப்படிதலும் தெரிவிக்கப்பட வேண்டும். மனிதர் மனிதர் பிற மனிதர்மீது கொண்டிருக்கின்ற அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு எதிராக அயைலாகாது. மாறாக, எல்லா மனிதரும் கடவுளின் விருப்பம் யாதெனக் கண்டு உணர்ந்து அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயேசு தம் விண்ணகத் தந்தைக்குப் பணிந்து வாழ்ந்தர். தம் பெற்றோருக்கும் அவர் பணிந்தார். இவ்வாறு இயேசு நமக்கு ஒரு முன்மாதிரிகை தந்துள்ளார்.
மன்றாட்டு:
இறைவா, எம் வாழ்க்கைப் பயணத்தில் எங்களோடு இருந்து வழிநடத்தியருளும்.
|