யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-05-30

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40 ,திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20 )




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்புக்குரியவர்களே,

மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று இறையாட்களும் இணைந்து ஒரே கடவுளாக செயல்படும் மறைபொருளுக்கு திருச்சபை இன்று விழா கொண்டாடுகிறது. இறைத்தந்தையின் மீட்புத்திட்டம் மண்ணுலகில் நிறைவேறுமாறு தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் மனிதரானார் என்ற உண்மையே கடவுளை முழுமையாக வெளிப்படுத்துகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மூவொரு இறைவனின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.



முதல் வாசகம்

மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள்முதல், வானத்தின் ஒரு முனைமுதல் மறு முனைவரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டது உண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர் வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? `மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின. அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. -பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, ``விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அப்பா, தந்தையே இறைவா,

உமது பிள்ளைகளாகிய இறைமக்களின் மேய்ப்பர்களாக விளங்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், மக்களை உமக்கு உகந்தவர்களாக உருவாக்கவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணக தந்தையே இறைவா,

இம்மண்ணகத்தில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும், நீதியிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வானக அரசரே இறைவா,

உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த எண்ணங்களிலும், தங் கள் சொந்த விருப்பங்களிலும் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், மறுவுலக வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடிட துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஒற்றுமை அருள்பவரே இறைவா,

உலகெங்கும் மதம், இனம், குலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளை கள் என்ற உணர்வோடு ஒற்றுமையில் வளரத் தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தொற்றுநோயால் சோர்ந்திருக்கும் எம் மக்களுக்காய்.....

விண்ணும் மண்ணும் அழிந்து போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா! எம் மக்களை உமது வார்த்தையால் வளமை படுத்தி, தொற்றுநோயால் சோர்ந்துபோயிருக்கும் அவர்களுக்கு உமது வாக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாய் அமைந்திடும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கமுள்ள எம் இறைவா!

உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். கோவிட் தொற்றுநோய் காரணமாக நாங்கள் அதிகமான அருள்பணியாளர்களையும், அருட்சகோதரிகளையும் இழந்துவிட நிலையில் மேலும் இந்நிலை தொடராமல் இருக்க உம்மை மன்றாடுகிறோம். அனைவருக்கும் அரணாகவும் கோட்டையாக இருந்து அவர்களை பாதுகாக்க தேவையான வரங்களை அருள வேண்டுகிறோம்.

நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா!

உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் மற்றும் தொற்றுநோயால் மரித்த அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்

எல்லா நிகழ்வுகளிலும் தந்தை மகன் தூய ஆவியாரை அழைத்தே நாம் காரியங்களை செய்கின்றோம். திருமுழுக்கு பெற்றது கூட அந்த திரியேக கடவுளை அழைத்தே பெற்றுக் கொண்டோம். இவர்கள் மூவராக இருந்தாலும், ஓரே நிலைப்பாடும், ஓரே தெய்வீகத் தன்மையும், ஒத்த செயல்பாடும் கொண்டவர்களாகவே திருஅவையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மூவருமே தொடக்க முதல் இறுதிவரை நம்முடனே இருக்கின்றார்கள்.

இந்த மூவொரு கடவுளை விசுவசிக்கின்ற நாம், அவரைப் போல படைத்து, பாராமரித்து, பாதுகாக்கின்ற பணிகள் பலவாறு இருந்தாலும், ஒத்த செயல்பாடு நம்மிலே இருக்குமேயானால், சாட்சிகளாக நாம் வாழ்ந்நதிட முடியும். இவ்வாறு வாழும் நம்மிலே நம்முடனே இவர்கள் இருந்து நம்மை பராமரித்து, பாதுகாப்பார்கள் என்பதிலே எந்த மாற்றுச் சிந்தனையும் இல்லை.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும்.