யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 8வது வாரம் வியாழக்கிழமை
2021-05-28
முதல் வாசகம்

அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை!
சீராக் ஆகமம் 42;15-25

15 ஆண்டவருடைய செயல்களை நினைவுபடுத்துவேன்; நான் கண்டவற்றை எடுத்துரைப்பேன். ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன. 16 ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது. 17 அனைத்தையும் தமது மாட்சியில் நிலைநிறுத்திய எல்லாம் வல்ல ஆண்டவர், தம் வியத்தகு செயல்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி தம் தூயவர்களுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. 18 படுகுழியையும் மனித உள்ளத்தையும் அவர் ஊடுருவி நோக்குகிறார்; மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை ஆராய்கிறார். அறியக்கூடியவற்றையெல்லாம் உன்னத இறைவன் அறிவார்; காலத்தின் குறிகளை உற்றுநோக்குகிறார். 19 நிகழ்ந்தவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் அவர் தெரியப்படுத்துகிறார்; மறைந்திருப்பவற்றின் தடயத்தை வெளிப்படுத்துகிறார். 20 எவ்வகை எண்ணமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை; ஒரு சொல்கூட அவருக்கு மறைந்திருப்பதில்லை. 21 அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்; அவரே என்றென்றும் இருக்கின்றவர். யாதொன்றும் கூட்டப்படுவதில்லை, குறைக்கப்படுவதுமில்லை; எவருடைய அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை. 22 அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை! பார்ப்பதற்கு எத்துணைப் பளபளப்பானவை! 23 இவையெல்லாம் உயிரோடு இருக்கின்றன; எல்லாத் தேவைகளுக்காகவும் என்றும் நிலைத்திருக்கின்றன; எல்லாம் அடிபணிகின்றன. 24 எல்லாம் இரட்டையாய் உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை. 25 ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவுசெய்கிறது. அவருடைய மாட்சியை நிறைவாகக் காண்பவர் எவர்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்
திருப்பாடல்கள் 33;2-9

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; பல்லவி

3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள். பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. பல்லவி

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது. பல்லவி

6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின. பல்லவி

7 அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார். பல்லவி

8 அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அiவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக! பல்லவி

9 அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.


நற்செய்திக்கு முன் வசனம்

"தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு 10;46-52

46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.52 இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு நின்று, 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, 'துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்றார்கள்'' (மாற்கு 10:49)

கலிலேயாவிலிருந்து எருசலேமை நோக்கி இயேசு பயணம் செய்துகொண்டிருக்கின்றார். எருசலேமில் அவருடைய எதிரிகள் இயேசுவைக் கைதுசெய்வார்கள்; அவருக்கு மரண தண்டனை விதித்து, அவர்மீது சிலுவையைச் சுமத்தி அவமதித்து இறுதியில் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வார்கள். இவையெல்லாம் நிகழப் போவதை இயேசு தம் சீடர்களுக்கு மூன்று முறை முன்னறிவிக்கின்றார். ஆனால் சீடர்கள் இயேசு கூறியதின் பொருளைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். அவர்களது கவனமெல்லாம் தங்களுக்கு என்ன பட்டம் பதவி கிடைக்கும் என்பதிலேயே இருக்கிறது. இந்த வரலாற்றை எடுத்துரைத்த பிறகு மாற்கு ஒரு பொருள்செறிந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளார். அதுவே ''பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்''' என்னும் பகுதியாகும் (மாற் 10:46-52). சீடர்கள் இயேசு யார் என்பதைக் காணத் தவறிய அதே நேரத்தில் பார்வையற்ற ஏழை மனிதராகிய பர்த்திமேயு என்பவர் இயேசுவைக் ''கண்டுகொள்கிறார்''. கண்பார்வை கொண்டவர்கள் பார்வையற்றவர்களாக இருந்த வேளையில் கண்பார்வையில்லாத மனிதர் ஒருவர் உண்மையிலேயே பார்வைகொண்டவராக இருப்பதை இவண் நாம் வாசித்துச் சுவைக்கலாம். பர்த்திமேயு இயேசுவை ''தாவீதின் மகனே'' என இருமுறை உரத்த குரலெழுப்பி அழைக்கின்றார். இயேசுவின் முன்னிலையில் அவ்வாறு கத்தக் கூடாது என மக்கள் பலர் அவரை அதட்டுகிறார்கள். ஆனால் பர்த்திமேயு அதை ஒன்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர் இயேசுவிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்: ''ரபூனி, நாம் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' (மாற் 10:51). இதுவே அந்த ஏழை மனிதரின் கோரிக்கை. பார்வையற்றவராக இருந்தபோதிலும் அவர் இயேசுவை உண்மையிலேயே ''பார்க்கின்றார்''. இயேசுவை ''ரபூனி'' என அவர் அழைப்பதும் கருதத்தக்கது. இச்சொல்லுக்கு ''என் தலைவரே'' என்பது பொருள். மிக நெருக்கமான உறவைக் காட்டுகின்ற சொல் இது.

தம்மை நோக்கிய மன்றாடிய பர்த்திமேயுவைத் தம்மிடம் வரச் சொல்கிறார் இயேசு. அந்த அழைப்பு இயேசுவிடமிருந்து புறப்பட்டதும் மக்கள் பர்த்திமேயுவுக்கு உற்சாகம் அளிக்கிறார்கள். ''துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மை அழைக்கிறார்'' (மாற் 10:49) என்று மக்கள் பர்த்திமேயுவைப் பார்த்துக் கூறியது நமக்கும் பொருந்தும். இயேசு இன்று நம்மை அழைக்கிறார். அவரை அணுகிச் செல்ல நாம் அஞ்ச வேண்டியதில்லை. துணிவுடன் நாம் அவரிடம் செல்லலாம். அவரும் நமது கண்களைத் திறப்பார். அன்று இயேசுவோடு வழிநடந்த அவருடைய சீடர்களின் கண்கள் இயேசுவைக் கண்டுகொள்ளவில்லை; ஆனால் கண்பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை அடையாளம் ''கண்டுகொண்டார்''. நாமும் இயேசுவை அடையாளம் கொண்டு, அவரில் நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகிறோம். அப்போது புதிதாகப் பார்வைபெற்ற பர்த்திமேயுவைப் போன்று நாமும் புதுப் பார்வை பெற்ற மனிதர்களாக மாறுவோம்; இயேசுவோடு ''வழி நடந்து செல்ல'' முன்வருவோம் (மாற் 10:52).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளியை ஏற்றி எங்கள் பார்வையைப் புதுப்பித்தருளும்.