யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 8வது வாரம் புதன்கிழமை
2021-05-27

கன்ரபெரி புனித அகஸ்ரின்




முதல் வாசகம்

ஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கங் காட்டும்;
சீராக் ஆகமம் 36;1, 2,4-5,9-17

1 எல்லாவற்றிற்றும் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாயிரும்; எங்களைக் கண்ணோக்கும்; உம்மைப்பற்றிய அச்சம் எல்லா நாடுகள் மீதும் நிலவச் செய்யும். 2 அயல் நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும். அவர்கள் உம் வலிமையைக் காணட்டும். 4 ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்து கொள்ளட்டும். 5 புதிய அடையாளங்களை வழங்கும்; வியத்தகு செயல்களை நிகழ்த்தும்; உம் கையினை, வலக்கையினை மாட்சிமைப்படுத்தும். 9 "எங்களைத்தவிர வேறு யாரும் இல்லை" எனக் கூறும் பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும். 10 யாக்கோபின் குலங்களை ஒன்று கூட்டும்; தொடக்கத்தில்போன்று அவர்களை உமது உரிமைச்சொத்தாக்கும். 11 ஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கங் காட்டும்; உம் தலைப்பேறாகப் பெயரிட்டழைத்த இஸ்ரயேலுக்குப் பரிவுகாட்டும். 12 உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது, நீர் ஓய்வுகொள்ளும் இடமாகிய எருசலேம்மீது கனிவு காட்டும். 13 உமது புகிழ்ச்சியால் சீயோனை நிரப்பும்; உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும். 14 தொடக்கத்தில் நீர் படைத்தவற்றுக்குச் சான்று பகரும்; உம் பெயரால் உரைக்கப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றும். 15 உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்; உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும். 16 ஆண்டவரே, உம் மக்களுக்கு ஆரோன் வழங்கிய ஆசிக்கு ஏற்ப உம்மிடம் மன்றாடுவோர்pன் வேண்டுதலுக்குச் செவிசாயும். 17 அப்போது, நீரே ஆண்டவர், என்றுமுள கடவுள் என்பதை மண்ணுலகில் உள்ள எல்லோரும் அறிந்துகொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்;
திருப்பாடல்கள் 79;8,9,11,13

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்;பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.பல்லவி

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம்.


நற்செய்திக்கு முன் வசனம்

உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.

நற்செய்தி வாசகம்

மாற்கு 10;32-45

32 அக்காலத்தில் சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். 33 அவர், "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; 34 அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர்களிடம் கூறினார். 35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள். 36 அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். 37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். 38 இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார். 39 அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். 40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார். 41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். 42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். 43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். 44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். 45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்

வாய்சொல் வீரர் நிறைய உண்டு. வாய்ப் பந்தல் போடுவோருக்கு இன்று குறையே இல்லை. கடினமான பாதையை கைகாட்டிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் உண்டு. எருசலேம் நோக்கிய பயணம் பாடுகள், துன்பங்கள் நிறைந்தது. அவமானம், சிலுவை மரணத்தில் முடிவது. பிறர் வாழ்வுக்காக தன்னை இழப்பது.இந்த வாழ்கையை கையை காட்டிவிட்டு மாற்றுப் பாதையில் இயேசு செல்லவில்லை.

" இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்" (மாற் 10:32) கரடு முரடான காட்டுவழியில் அவர் நமக்கு முன் நடந்து தடம் அமைத்து தந்துள்ளார். பூகம்பம் நிறைந்த வாழ்வில் புதிய புரட்சிப் பாதை அமைப்பதில் இயேசு நமக்கு முன் நடந்து புதிய பாதை அமைத்துள்ளார். நம் வாழ்வின் துன்பப் பயணத்தில் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறார்.உன் வாழ்வின் இருள் சூழ்ந்த நேரங்களில், பகுதிகளில் உனக்கு முன் உன் தெய்வம் இயேசு அங்கு வந்து உன் வாழ்வின் இருளை அகற்றி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். இதுவே உன் தெய்வம் இயேசு.

உங்கள் வாழ்வின் துன்பமும் கவலையும் இருளும் சூழ்ந்த இடங்களில் எல்லாம் இயேசு உங்களுக்கு முன் சென்று அனைத்தையும் நிவர்த்தி செய்து, மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த உயிர்ப்பின் அனுபவமாக மாற்றித்தருவதை உங்களால் நம்ப முடிகிறதா! இதுவே உண்மை. சீடர்கள் திகைப்புற்றனர். ஏனையோர் அச்சம் கொண்டனர். நீங்கள் நம்புங்கள். நல்லவை நடக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புக்குச் சான்று பகர்ந்து இவ்வுலகில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.