யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-05-25
முதல் வாசகம்

கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12

திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்; கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும். தருமம் செய்வது நன்றிப் பலி செலுத்துவதாகும். தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும். ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து. நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது. நீதிமான்களின் பலி ஏற்றுக் கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு. உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு. உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர். ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே. அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே. ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையா

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 5-6. 7-8. 14, 23

பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.' 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! பல்லவி

7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்று கூறப்போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்; 8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

கடைசியானோர் முதன்மை ஆவர்

இழப்பு என்பதற்கு நம் கிறிஸ்தவம் புதிய ஒரு பொருள் கொடுப்பதைக் காண்கிறோம். பொதுவாக, விட்டுவிடுதல், இழத்தல் என்பது நம்மில் ஒரு வெற்றிடம் ஏற்படுத்துவதாக பொருள் கொள்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் போதனையின்படி, இவை உணர்த்துவதெல்லாம் முற்றிலும் வித்தியாசமானவை. இழத்தல் அல்லது விட்டுவிடுதல் நமக்கு மேலும் பல வேறுபட்ட செல்வத்தைக் கொண்டுவரும் என்ற கருத்தைப் பல இடங்களில் அறிய வருகிறோம். விட்டுக்கொடுத்தவர் எவரும் கெட்டதும் இல்லை; கெட்டவர் எவரும் விட்டுக் கொடுத்ததும் இல்லை. விட்டு விட்ட எவரும் "நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்பது கிறிஸ்தவம் தரும் செய்தி. " கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.( யோவா12 :24 )

எனவே நண்பர்களே, கிறிஸ்துவின் பணிக்காக அல்லது அவரின் சாயலாகப் படைக்கப்பட்ட அவரைச் சார்ந்து வாழும் மனிதனுக்காக நீங்கள் செய்யும் தான தர்மங்களால் நீங்கள் இழக்கும் அனைத்திற்கும் பல் வேறு விதங்களில் பல நன்மைகளை இவ்வுலகிலும் மறு உலகிலும் பெறுவீர்கள். எதையும் இழந்து போவதில்லை.பேதுருவின் சந்தேகத்திற்கு இயேசு இந்த விளக்கத்தைக் கொடுத்ததன் மூலம் கிறிஸ்தவத்தின் இத் தனித்தன்மையை உறுதிசெய்கிறார். எனவே நாம் இழப்போம், கொடுப்போம், விட்டு விடுவோம். நமக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். இவ்வாறு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.