யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 6வது வாரம் வியாழக்கிழமை
2021-05-13




முதல் வாசகம்

"ஆண்;டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்18;1-8

1 இந்நாட்களில் பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். 2 அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், "யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்" என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். 3 கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார். 4 ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார். 5 சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; 'இயேசுவே மெசியா என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார். 6 அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தப்போது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, "உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்" என்று கூறினார்; 7 அவ்விடத்தை விட்டு விட்டுக் கடவுளை வழிபடும் தீத்து யுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக் கூடத்தை அடுத்து இருந்தது. 8 தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்;டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
திருப்பாடல்கள் 98;1-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.பல்லவி

3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.பல்லவி

4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.


நற்செய்திக்கு முன் வசனம்

"'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்க

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:16-20

16 யேசு சீடர்களிடம்"இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள். " 17 அவருடைய சீடருள் சிலர், "'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்" என்றும் "நான் தந்தையிடம் செல்கிறேன்" என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். 18 "இந்தச் "சிறிது காலம்" என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே" என்றும் பேசிக் கொண்டனர். 19 அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்பவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது; "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்" என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். 20 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்...நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்றார்'' (யோவான் 16:16,20)

இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்திய வேளையில் அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். விரைவில் தாம் இறக்கப் போவதை இயேசு முன்னறிவித்தார். எனவே, ''இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்'' என்று இயேசு கூறினார். இயேசுவைக் காணாமல் சீடர்கள் துயருறுவார்கள் என்பதும் அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. சீடர்கள் அனுபவித்த துயரம் சிறிது காலத்திற்கு மட்டுமே. எனவேதான் இயேசு அவர்களை நோக்கி, ''மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்'' என்றார். இது இயேசுவின் சாவுக்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்து, சீடர்களுக்குத் தோன்றுவார் என்னும் செய்தியின் முன்னறிவிப்பாயிற்று. ஆக, சீடர்கள் துயரப்படுவார்கள் என்பது உண்மையாயினும் அவர்களுடைய துயரம் ஒருநாள் மகிழ்ச்சியாக மாறும் என்பது அதைவிட அதிக உறுதியான உண்மை.

இயேசுவின் சீடர்களாக வாழ்கின்ற நமக்கும் இயேசு கூறுகின்ற வார்த்தைகள் பொருந்தும். அதாவது, இயேசுவை நம்பிக்கையோடு வாழ்கின்ற மக்களுக்குத் துன்ப துயரங்கள் வரும். அவர்களுடைய நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவர். அவர்களைத் துன்புறுத்துவோர் ஏதோ நல்ல காரியம் செய்வதுபோல நினைக்கக் கூடும். ஆனாவ் இத்துன்பமும் துயரமும் ''சிறிது காலம்'' மட்டுமே நீடிக்கும். ஏனென்றால் இயேசு தம் சீடர்களுக்கு மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவிக்கவே வந்தார். அந்த மகிழ்ச்சி நம் மண்ணுலக வாழ்வுக்குப் பின் வருகின்ற விண்ணுலக வாழ்வைச் சார்ந்தது மட்டுமல்ல. இயேசு வாக்களிக்கின்ற மகிழ்ச்சி இவ்வுலகத்திலேயே தொடங்குகிறது என்பதே உண்மை. ஏனென்றால் இயேசு நம்மோடு வாழ்கின்றார். அவர் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரிந்து போய்விடவில்லை. இதை நாம் உண்மையாக நம்பினால் நம் உள்ளத்தில் துயருறுவதற்குத் தேவையில்லை. இயேசு நம்மைவிட்டு மறைந்ததுபோன்ற உணர்வு நம்மில் எழுந்தாலும் அது ''சிறிது காலம்'' மட்டுமே என நாம் அறிவோம். ஆக, இயேசுவின் சாவிலும் உயிர்த்தெழுதலிலும் பங்குபெறுவோர் இவ்வுலகிலேயே விண்ணகத்தின் முன்சுவையை அறிகின்றார்கள் எனலாம். நமக்கு வழங்கப்படுகின்ற மகிழ்ச்சி ஒருநாள் நிறைவுபெறும், முழுமையடையும் என்பது நம் நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் துன்ப துயரங்களின் நடுவிலும் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.