யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 6வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-05-11




முதல் வாசகம்

" பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்16;22-34

இந்நாட்களில் பிலிப்பு நகர் மக்கள் திரண்டெழுந்து ப்வுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். 23 அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக்கருத்தாய்க் காவல் செய்யுமாறுசிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். 24 இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். 25 நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26 திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. 27 சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார். 28 பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, "நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்" என்றார். 29 சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். 30 அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார். 31 அதற்க அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள். 32 பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். 33 அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். 34 அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;
திருப்பாடல்கள் 138:1-3,7-8

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். பல்லவி

2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். பல்லவி

3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். பல்லவி

8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.


நற்செய்திக்கு முன் வசனம்

நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.என்கிறார் ஆண்டவர். .

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:5-11

அக்காலத்தில் யேசு கூறியதாவது இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் "நீர் எங்கே போகிறீர்?" என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். 7 நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். 8 அவர் வந்து பாவம், நிதீ, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். 9 பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. 10 நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள். 11 தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றவிட்டான்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை'' (யோவான் 5:41)

இயேசுவின் எதிரிகள் அவர்மீது பலவிதமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இயேசு எந்த அதிகாரத்தோடு போதிக்கத் துணிந்தார் என்பது அவர்கள் எழுப்பிய ஒரு முக்கியமான கேள்வி. அதற்குப் பதில் அளிக்கும்போது இயேசு தம்முடைய அதிகாரம் தந்தை இறைவனிடமிருந்து வருகிறது என்று கூறுகிறார் (யோவான் 5:31-35). இயேசுவைப் பற்றித் திருமுழுக்கு யோவான் சான்றுபகர்ந்தார் (யோவான் 5:33-36). இயேசு புரிந்த செயல்களே அவர் யார் என்பதை வெளிப்படுத்துகின்றன (யோவான் 5:36-37). மேலும், யூத சமயத்திற்கு மையமாக அமைந்த (பழைய ஏற்பாட்டு) விவிலியம் இயேசுவைப் பற்றி அறிவிக்கிறது (யோவான் 5:39-47). இவ்வாறு இயேசு தம்மைப் பற்றியும் தம் பணிபற்றியும் விளக்கம் தந்தார். அப்போது அவர் கூறியது: ''மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை'' (யோவான் 5:41) என்பதாகும்.

மனிதர் சில சமயங்களில் உண்மையின் அடிப்படையில் தீர்ப்பிட மறுக்கிறார்கள்; தம் கண்முன்னால் நிகழ்வதை ஏற்கத் தயங்குகிறார்கள். உண்மையை ஏற்றுக்கொண்டால் அந்த உண்மையின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களை மாற்றவேண்டிய தேவை எழும் என்பதைக் கண்டு மனிதர் அஞ்சுகிறார்கள். இயேசு இதைத் தம் எதிரிகளுக்குச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் தங்கள் கடின மனத்தைத் தவிர்த்து, இளகிய மனம் கொண்டவர்களாக மாறினால், அடைபட்ட உள்ளத்தைச் சிறிது திறந்துவிட்டால் உண்மையைக் கண்டுகொள்வார்கள் என இயேசு உணர்த்துகிறார். எனவே, மனிதர் தம் சொந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இயேசுவை மதிப்பிடுவதற்குப் பதிலாகக் கடவுளின் பார்வையில் இயேசு எந்நிலையில் உள்ளார் என்பதைச் சிறிது கவனித்திருந்தால் இயேசுவைப் பற்றிய உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். இது இன்றைய மனிதருக்கும் ஒரு சவாலாக உள்ளது. நாம் இயேசுவை எவ்வாறு புரிந்துகொள்கிறோம்? நம் விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்து, இயேசுவைக் கடவுள் எவ்வாறு கண்டாரோ அவ்வாறே நாமும் காண முயலவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் திறந்த உள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்திட அருள்தாரும்.