யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-05-09

(இன்றைய வாசகங்கள்: திருத்துதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:25-26, 34-35, 44-48,பதிலுரைப்பாடல் திபா. 98:1-4,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 4:7-10,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைவனின் அன்பர்களே,

இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இறைவனின் அன்பில் நிலைத்திருக்க இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு தந்தையின் அன்பில் நிலைத்திருப்பதுபோல, இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் இணைந்திருந்து, ஒருவர் மற்ற வரை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.
திருத்துதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:25-26, 34-35, 44-48

அக்காலத்தில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.பேதுரு, ;எழுந்திடும்: நானும் ஒரு மனிதன்தான் ; என்று கூறி அவரை எழுப்பினார். அப்போது பேதரு பேசத் தொடங்கி, ;கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்: ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, ;நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்? ; என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
பதிலுரைப்பாடல் திபா. 98:1-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவரு டைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி:

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ர யேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி:

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி:

இரண்டாம் வாசகம்

கடவுள் அன்பாய் இருக்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 4:7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். ;நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்: ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அன்பே உருவான இறைவா,

திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர, தேவை யான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

அன்பின் நிறைவே இறைவா,

உமது அன்பை வெளிப்படுத்த, இந்த உலகில் தோன்றிய உம் திருமகன் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, அவர் வழியாக உம்மை அன்பு செய்யும் வரத்தை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

அன்பின் அரசரான இறைவா,

எங்கள் நாட்டு மக்களிடையே, உம்மைப் பற்றிய விழிப்புணர்வு பெருகவும், உமது அன்பின் அரசில் ஒன்றிணையும் ஆர்வம் வளரவும், அதன் வழியாக எம் நாட்டில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைவு காணவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

அன்பின் பிறப்பிடமே இறைவா,

உலகில் அன்பின்மையால் உருவாகியுள்ள அனைத்து தீமைகளும் முடிவுக்கு வரவும், இறையன்பும் பிறரன்பும் மக்களிடையே வளர்ச்சி காணவும், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கவும் உதவ வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

அன்பு தந்தையே இறைவா,

எங்கள் பங்கு சமூகத்தில் அன்பும் ஒற்றுமையும் பெருகவும், அன்பு செயல்கள் வளரவும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, உமது அன்பில் நிலைத்திருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

அன்பே உருவான எம் இறைவா,

இன்று உலகில் உள்ள தீவிரமான தொற்றுநோய் 2ஆம் அலை, 3ஆம் அலை என்று எங்களை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில் உமது வல்லமை மிக்க உறுதியான கரங்களால் மீட்டு இயேசுவின் இரத்தம் எங்களை காக்கும் என்ற நம்பிக்கையை நம் மனங்களில் பதிவு செய்து உலகமக்கள் அனைவரும் நற்சுகம் பெற்று அமைதியில் வாழ தேவையான வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் ஆற்றலே! எம் இறைவா!

எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. இந்த தொற்றுநோய் காலத்தில் பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவர்கள் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் காண தேவையான ஞானத்தையும், ஆற்றலையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” !

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்னும் இந்தப் பிரபலமான இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம். நமது கிறித்தவ வாழ்வும், நமது பணியும், நமக்கு இறைவன் தந்திருக்கிற தனிப்பட்ட அழைப்பும்ரூhநடடip; அனைத்துமே நமது சொந்த முயற்சிகள் அல்ல. அனைத்தும் இறைவனின் கொடை. இறைவனே நம்மைத் தேர்ந்துகொண்டதால், நமக்குக் கிடைத்தவை. நமது தகுதியின்மையைப் பாராமல், அவரது இரக்கத்தையே கண்ணோக்கியதால், நாம் பெற்றுக்கொண்டவை. எனவே, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்துடன், எதற்காக இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதையும் நாம் சிந்திக்க இன்றைய வாசகம் அழைக்கிறது. ‘நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்’. ஆம், இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமே நாம் கனி தரவேண்டும். நாம் பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். இந்த உண்மையை மறவாமல், நேர்மையோடு, பிறருக்குப் பயன்தரும் வகையில் நாம் உழைப்போமாக.

மன்றாட்டு:

தாயின் வயிற்றிலேயே என்னைப் பெயர் சொல்லி அழைத்த இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் தந்த அழைத்தலுக்காகப் போற்றுகிறேன். இந்த அழைத்தலுக்கேற்ற வகையில் வாழ அருள்தாரும். மிகுந்த கனி தரும் மரமாக என்னை மாற்றும். ஆமென்.