முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்கா காலம் 5வது வாரம் சனிக்கிழமை 2021-05-08
முதல் வாசகம்
திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16:1-10
1 பின்பு பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப்பெண். தந்தையோ கிரேக்கர்.
2 திமோத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர்.
3 பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.
4 அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப்பிடிக்குமாறு கூறினார்.
5 இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.
6 பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர்.
7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.
8 எனவே அவாகள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர்.
9 பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, "நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று வேண்டினார்.
10 இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
திருப்பாடல்கள் 100:1-3,5
1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!பல்லவி
3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!பல்லவி
5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
நற்செய்திக்கு முன் வசனம்
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்என்கிறார் ஆண்டவர். .
நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:18-21
18 "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
19 நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
20 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்!
21 என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
உலகைச் சார்ந்தவர்கள் அல்ல !
இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக இயே நமக்குத் தரும் செய்தி: #8220;நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல”. இயேசு உலகினரை இரு பிரிவினராகப் பிரிக்கவே வந்தார். இருளைச் சார்ந்தவர்கள், ஒளியைச் சார்ந்தவர்கள், இந்த உலகைச் சார்ந்தவர்கள், இவ்வுலகில் வாழ்ந்தாலும், விண்ணைச் சார்ந்தவர்கள். இயேசுவின் சீடர்கள் அனைவரும் இரண்டாம் பிரிவைச் சொந்தமாக்கிக்கொண்டவர்கள். நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர். இவ்வுலகின் தலைவன் என அழைக்கப்படும் அலகையின் அடிமை அல்ல. மாறாக, விண்ணகமே நமக்குத் தாய்நாடு. நாம் இங்கே பயணிகள் மட்டுமே. நமது கால்கள் மண்ணில் இருந்தாலும், நமது கண்களும், இதயமும் விண்ணை நோக்கிய வண்ணமே இருக்கவேண்டும். நமது எண்ணங்கள் இவ்வுலக எண்ணங்கள் போல் இல்லாமல், நமது கவலைகளும் இவ்வுலகக் கவலைகளாக இருக்கக் கூடாது. நாம உயிர்ப்பின் மக்கள். ஆவியின் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, நமது வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வோமாக.
மன்றாட்டு:
எங்களின் ஆர்வமும், ஆற்றலுமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தந்தை இறைவனை நோக்கி எங்கள் இதயங்களை எழுப்பியருளும். எங்களது ஆர்வமும், ஏக்கமும் இவ்வுலகப் பொருள்கள்மீது இல்லாமல், நிலையான இன்பமான உம்மீதே இருப்பதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|