யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 5வது வாரம் வியாழக்கிழமை
2021-05-06




முதல் வாசகம்

நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்15:7-21

7 நெடு நேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து அவர்களை நோக்கிக் கூறியது; "சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக்;கேட்டு அதில் நம்பிக்கைகொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 8 உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார். 9 நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை. 10 ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? 11 ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்." 12 இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்னர். 13 அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது; "சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். 14 கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள். 15 இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்; 16 "இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்; அதிலுள்ள கிழிசல்களைப் பழுது பார்த்து அதைச் சீர்ப்படுத்துவேன். 17 அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்." 18 தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார். 19 எனவே என் முடிவு இதுவே; கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. 20 ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுதவேண்டும். 21 மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்
திருப்பாடல்கள்96:1-3,10

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே,;பல்லவி

2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.;பல்லவி

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.;பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:9-11

9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். 10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். 11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

“அன்பில் நிலைத்திருங்கள்”

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறாகிய இன்று உயிர்ப்புக் காலத்தின் மையப் பொருள்களில் ஒன்றான “அன்பில் நிலைத்திருங்கள்”“ என்னும் செய்தியைத் தருகிறது தாய்த் திருச்சபை. உயிர்ப்பின் சாட்சிகளாம் தொடக்க கால சீடர்கள் அன்பில் நிலைத்திருப்பதைப் பார்த்து, யூதர்களும், புற இனத்தாரும் வியந்தனர். அவர்களின் அன்பு செய்தலைக் கொண்டே அவர்கள் கிறித்தவர்கள் என அறிந்துகொண்டனர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ என் அன்பில் நிலைத்திருங்கள்”“ என்னும் இயேசுவின் அழைப்பைக் கேட்கிறோம். ‘அன்பில் நிலைத்திருத்தல்’‘ என்றால் என்ன? என்னும் விளக்கத்தையும் இயேசு தருகிறார். “நான் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்”“ என்கிறார் ஆண்டவர். ஆம், அன்பில் நிலைத்திருப்பதற்கு இயேசுவே நமக்கு மாதிரி. அவர் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்ததுபோல, நாமும் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போமா? வேறு வகையில் சொல்வதானால், இறைவார்த்தையின்படி வாழ்வது இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பதாகும். நாள்தோறும் நாம் கேட்கும் இறைமொழியை நம் வாழ்வில் கடைப்பிடித்து, இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும் வரம் வேண்டுவோம்.

மன்றாட்டு:

தந்தையின் அன்பில் நிலைத்திருக்கும் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.