யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2021-04-25

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 4: 8-12,பதிலுரைப்பாடல் திபா. 118:1, 8-9, 21-23, 26,28,29,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 3:1-2,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஏனெனில், நீர் நல்லவர்; என்றென்றும் உள்ளது உமது பேரன்பு.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நல்லவரும், நிலையான பேரன்பை உடையவருமான நம் இறைத் தந்தையின் திருப்பெயரில் நல்வாழ்த்துக்கள் கூறி பாஸ்காக் காலம் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்!" என்னும் இறைவார்த்தைகள் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்க நமக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கின்றன. நாம் நமது சொந்த வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும், ஆன்மீக வாழ்விலும் சந்தித்த அவலங்களுக்கும், அழுகுரல்களுக்கும் காரணம் என்ன என்ற வினாவுக்குரிய விடையையும், நமக்கு மீட்பு எங்கிருந்து வருகின்றது என்ற உண்மையையும் இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழுத்தம், திருத்தமாய் எடுத்துக் கூறுகின்றன. உண்மையான இந்த நல்ல செய்திக்காகவும், நல்லாயனாம் இயேசுவின் வழிநடத்துதலுக்காகவும் நன்றி செலுத்துவோம். மனிதர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை விடுத்து நம் கடவுளாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளுவோம். எப்பொழுதும் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்க அருள் வரம் கேட்டு இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

இயேசுவினாலே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 4: 8-12

அந்நாள்களில் பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: 'மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, 'கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார். ' இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
பதிலுரைப்பாடல் திபா. 118:1, 8-9, 21-23, 26,28,29

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள் ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடை க்கலம் புகுவதே நலம்! பல்லவி:

என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக் கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயி ற்று! பல்லவி:

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங் களுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின் றேன்: என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத் துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி:

இரண்டாம் வாசகம்

கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 3:1-2

அன்பிற்குரியவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்: ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே நானும் என் ஆடுகளை அறிந் திருக்கிறேன்: என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில் இயேசு கூறியது: நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். 'கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல: ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல: ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்: நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்: என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். வையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்: அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு: அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆற்றலின் ஊற்றாம் இறைவா,

திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும், இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக உலகெங்கும் நற்செய்தியை பறைசாற்றத் தேவையான துணிவை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

எமது மன்றாட்டைப் வெறுத்துத் தள்ளாத தந்தையே இறைவா!

உம்முடைய மக்களாகிய நாங்கள் மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! என்னும் உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, எமது வாழ்வில் உமது குரலுக்கு மாத்திரமே செவிகொடுத்து வாழ்வதன் வழியாக உம்மைக் கண்டுணர்ந்து வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள்: நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னதரான தந்தையே!

திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவர்களின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணும் மண்ணும் அழிந்துப் போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா,

மீண்டும் வந்துள்ள தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் முதியோர்களை உமது வார்த்தையால் வளமைப்படுத்திச் சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாய் அமைந்திடவும், தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து; நல்ல உடல்நிலைத் தரவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவருடைய கட்டளைகளை இதயத்தில் இருத்திக் கொள்பவர் நீடிய ஆயுளையும், நிலையான நலன்களையும் பெற்றுக் கொள்வார் என்ற மொழிந்த எம் இறைவா!

கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். நம்மீது அவர் மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அதே இரக்கத்தையும் அன்பையும் நாம் பிற மனிதர்களுக்கும் காட்ட எங்களுக்கு அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்' என்றார்'' (யோவான் 10:11)

இஸ்ரயேல் மக்களை அன்போடும் பரிவோடும் வழிநடத்திய கடவுள் தம்மை அவர்களுக்கு ஒரு நல்ல ஆயராக வெளிப்படுத்தினார். மக்களும் கடவுள் தங்களைப் பராமரிக்கின்ற நல்ல ஆயர் என்பதை அனுபவித்து உணர்ந்தார்கள். ஆயராக இருந்து தம் மக்களை வழிநடத்திய கடவுள் அவர்களுக்கு உணவு அளித்தார்; அவர்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்தார்; அவர்களை ஒரு மக்களினமாக உருவாக்கினார். இவ்வாறு கடவுளின் அன்பினைத் துய்த்துணர்ந்த மக்கள் கடவுள் தங்களோடு உடனிருந்து தங்கள் இன்பதுன்பங்களில் பங்கேற்றதை அனுபவத்தில் உணர்ந்தார்கள். நல்ல ஆயராகத் தம் மக்களை வழிநடத்திய கடவுள் அம்மக்களுக்காகத் தம் உயிரையும் கொடுப்பார் என்பதை இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார். இயேசுவின் வாழ்வில் துலங்கிய அன்பு பல விதங்களில் வெளிப்பட்டது. இயேசு மக்களுக்குக் கடவுளின் சட்டத்தைக் கற்பித்தார்; அவர் மக்களின் பிணிகளைப் போக்கி அவர்களுக்கு நலமளித்தார்; முறிந்த மனித உறவுகளை அவர் சீர்ப்படுத்தினார். இவ்வாறு மக்களுக்காக வாழ்ந்த இயேசு அவர்களுக்காக இறக்கவும் தயங்கவில்லை.

ஆடுகளை மேய்க்கின்ற ஆயர் அந்த ஆடுகளுக்காகத் தம் உயிரைப் பலியாக்குவது ஓர் அதிசயமான செய்தியாகத்தான் நமக்குத் தென்படும். ஆனால் இயேசுவோ தம் உயிரை நமக்காகக் கல்வாரியில் பலியாக்குகிறார். நம்மேல் கொண்ட எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக அமைகிறது அவருடைய சிலுவைச் சாவு. இயேசு என்னும் நல்ல ஆயர் மற்ற ஆயர்களைப் போல் அல்லாமல் தம் உயிரையே தம் ஆடுகளுக்காகக் கையளிக்கத் தயங்காதவர். இத்தகைய பேரன்பு கொண்ட ஆயர் நம் மீட்பராகிய இயேசு. இந்த இயேசுவையே நாம் நம் மீட்பராகவும் நமக்கு விடுதலை அளிக்கும் வீரராகவும் ஏற்றுள்ளோம். இதுவே நாம் இயேசுவின்மீதும் அவரை நம்மிடையே அனுப்பிய தந்தையாம் கடவுள்மீதும் கொள்கின்ற நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால் நாம் இயேசுவின் அன்பை ஒவ்வொரு நாளும் ஆழமாக உணர்ந்து அனுபவிக்கும் பேறு பெறுவோம். நமக்காகத் தம்மைக் கையளிக்கின்ற இயேசு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார். அதே நேரத்தில் அவரே நமக்குப் புது வாழ்வு அளித்து அந்த வாழ்வில் நாம் இடையறாது நிலைத்து நிற்கின்ற அருளையும் நமக்கு அளிக்கிறார். இவ்வாறு நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற ''நல்ல ஆயர்'' நம்மோடு இருப்பதால் நமக்குக் குறையேதும் இல்லை (காண்க: திபா 23). அவரே நம்மை பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்வார்; நம் தாகத்தைத் தணிப்பார்; நம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்து நமக்குப் புத்துயிர் அளிப்பார். அவர் அளிக்கின்ற உயிர் நம்மைக் கடவுளோடு நிலைவாழ்வில் இணைக்கும் சக்தி கொண்டது. எனவே நம் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும்; நம் உள்ளம் உவகை கொண்டு களித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை அன்போடு வழிநடத்துகின்ற உம்மை நம்பி வாழந்திட எங்களுக்கு அருள்தாரும்.