யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-04-23




முதல் வாசகம்

``சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'' என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், ``ஆண்டவரே நீர் யார்?'' எனக் கேட்டார். ஆண்டவர், ``நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-20

அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது, திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, ``சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'' என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், ``ஆண்டவரே நீர் யார்?'' எனக் கேட்டார். ஆண்டவர், ``நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்'' என்றார். அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``அனனியா!'' என அழைக்க, அவர், ``ஆண்டவரே, இதோ அடியேன்'' என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், ``நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்'' என்று கூறினார். அதற்கு அனனியா மறுமொழியாக, ``ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்'' என்றார். அதற்கு ஆண்டவர் அவரிடம், ``நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக் காட்டுவேன்'' என்றார். அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று, கைகளை அவர்மீது வைத்து, ``சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்'' என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதில்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
திருப்பாடல்திபா 117: 1. 2

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி 2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:52-59

52 "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. 53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். 54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58 உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். " 59 இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்"

"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். என்ற இயேசுவின் வெளிப்பாடு அன்றும் இன்றும் விவாதத்திற்கும் வினாவுக்கும், சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் உள்ள கருப்பொருள். ஆனால் விசுவசிப்போருக்கு அதுவே மூலப்பொருள். அறிவு மட்டும் பயன்படுத்தி விடை காணும் விஞ்ஞான வினைப் பொருள் அல்ல இயேசு குறிப்பிடும் உணவு. உண்ணும் உணவு உடலோடு இணைந்து விடுவது போல, இவ்வுணவை உண்போரும் அவராகவே மாறிவிடுவர். அவரில் இணைந்துவிடுவர். "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்".(யோவா6:56) இவ்வாறு இணைந்துவிடுவதால் இயேசுவைப்போன்ற மனநிலை, சிந்தனை, செயல்பாடுகள் அனைத்தும் அவர்உடலை உண்போரிலும் காணப்படும். இவ்வாறு அவராகவே மாறுவதால் அவரோடு உயிர்ப்பிலும் பங்குபெறுகிறோம். அதுவே நிலை வாழ்வாகிறது. ஆகவே இது முன்னோர் உண்ட உணவு போன்றதல்ல. மாறாக இது உண்போருக்கு முடிவில்லா வாழ்வைக் கொடுக்கவல்லது. இவ்வுணவை உண்டு இயேசுவோடு இணையும் நாம், இயேசுவின் உயிர்ப்பிலும் பங்கு பெறுவதால், அவரோடு விண்ணக வாழ்வையும் அவ்வுணவு நமக்குத் தருகிறது. இதை உண்டு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நீரே உமது வார்த்தையாலும், அருள் அடையாளங்களாலும் கற்றுத் தருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.