யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2021-04-17
முதல் வாசகம்

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 6:1-7

1 அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். 2 எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. 3 ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். 4 நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்" என்று கூறினர். 5 திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கோலா, தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து 6 அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். 7 கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல்கள் 33:1-2, 4-5, 18-19

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
இயேசு அவர்களிடம், ``நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

'நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்'

இந்த நிக்கதேம் ஒரு நல்ல மனிதர். நல்லவராக வாழ வேண்டும் என்ற ஆசையுள்ள மனிதர். ஆகவே இயேசுவைத் தேடி வந்தார். இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது"(யோவா3:3) மறுபடியும் பிறந்தால்தான் நன்றாக நல்லவனாக வாழமுடியும் என்றார். மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? என்று நிக்கதேம் கேட்ட உடலின் பிறப்பு அல்ல. மாறாக ஆன்ம வாழ்வுக்குள் பிறக்கும் புதுப்பிறப்பு. இயல்பான முறைப்படி பிறந்தவன், தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவன் என்று பிறப்பை இரு வகைப்படுத்துகிறார் பவுலடியார்(வாசிக்க கலாத் 4:29) தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.( யோவா 3:8) "கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை" (1 யோவான் 5 :18) "அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" (1 யோவா4:7) புனித யோவானின் "தீமையைப் பின்பற்ற வேண்டாம்; நன்மையையே பின்பற்றும். நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" என்னும் இவ் அறிவுரைப்படி வாழும் வாழ்க்கை ஒரு மறு பிறப்புக்குச் சமம்.

இந்த பிறப்பு ஒருநாள், ஒரு முறை ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறுவதல்ல. ஞானஸ்நானத்தில் நீராலும் தூய ஆவியாலும் திருமுழுக்குப் பெற்றோம். மறு பிறப்படைந்தோம். உண்மைதான். ஆனால் அதோடு முடிந்து விடும் ஒருநாள் கூத்து அல்ல. தினமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நற்செயல்கள் செய்து புதிது புதிதாக மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். நிக்கதேமிடம் எதிர்பார்த்தது இப்பிறப்பை. நம்மிடமும் அதையே எதிர்பார்க்கிறார். மீண்டும் மீண்டும் பிறப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.