யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-04-11

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-35,திபா 118: 2-4. 16யb-18. 22-24,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6, +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பாஸ்காக் காலம் இரண்டாம்; ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும் நாம்ஒன்று கூடியுள்ளோம்.

இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், மன அமைதியும் பிறக்கின்றது. பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும் எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது. உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். அத்தோடு நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு என்னும் அருட்சாதனத்திற்கான பணியையும், அனுமதியையும் அவருடைய பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார். இதன் வழியாக நாம் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்வதோடு நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறோம்;. இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாகத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-35

அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திபா 118: 2-4. 16யb-18. 22-24

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி 16யbஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி 22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பாவத்தின்மீதும், சாவின்மீதும் கிறிஸ்து இயேசுவை வெற்றி கொள்ளச் செய்த தந்தையே இறைவா!

தூய ஆவியின் நிறை வல்லமையால் இன்றைய திருச்சபையில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் மீட்பின் பாதையில் மக்களை வெற்றியுடன் வழிநடாத்திச் செல்ல வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியின் தேவனே இறைவா!

அநீதி, அடிமைத்தனம் இவற்றை அழித்திட அனைத்து நாடுகளின் தலைவர்களும் பாடுபடவும், உண்மையின் வழிதான் என்றும் நிலைபெறும் என்பதை உணர்ந்து நல்லாட்சி செய்திட வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சமாதானத்தின் தேவனே இறைவா!

இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே சமாதானத்தை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் சமாதானம், ஒற்றமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள்: நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னதரான தந்தையே!

திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவர்களின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணில் வாழ்பவராம் இறைவா,

எங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சாட்சிகளாக வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமாகவும் வெளிப்படுத்தவும், இயேசுவின் சிந்தனைகள், பணிவாழ்வு, இறுதி இலக்கு இவற்றை எமதாக்கி இருக்குமிடத்தில் விண்ணகத்தை உருவாக்கத் தேவையான நல்வரங்களைத் தர வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் மக்களைக் கண்ணோக்கியருளும். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவும், இந்நோய் முற்றிலும் நீங்கிடவும், இத்தவக்காலத்தில் உம் மக்கள் அனைவரும் ஆலயம் சென்று, ஒன்றிணைந்துச் செபிக்கவும் தேவையான அருளை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு தோமாவிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார்'' (யோவான் 20:29)

சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு பலருக்குத் தோன்றினார் என நற்செய்தி நூல்களும், திருப்பணிகள் நூலும், தூய பவுலும் குறிப்பிடுகின்றனர். தாம் தேர்ந்துகொண்ட சீடர்களுக்கு இயேசு தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய தோமா இயேசுவைக் கண்டு அவரில் நம்பிக்கை கொண்ட நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. ஏனென்றால் இயேசு தோன்றியபோது தோமா அங்கே இல்லை. தோமாவிடம் பிற சீடர்கள் தாங்கள் இயேசுவைக் கண்டதாகக் கூறிய பிறகும் அவர் நம்ப மறுக்கிறார். தாமாகவே நேரடியாக இயேசுவைக் கண்டால்தான் நம்பமுடியும் என அவர் உறுதியாகக் கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பிறகு இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத் தோன்றியபோது தோமாவும் கூட இருக்கிறார். இயேசு தோமாவை அழைக்கிறார். தம் அருகே வந்து தம்மைத் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார். ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்ளக் கேட்கிறார். இயேசுவை அணுகிச் சென்று, அவரைத் தொட்டுப் பார்க்கும் துணிச்சல் தோமாவுக்கு வரவில்லை. ஏன், இயேசுவின் குரலைக் கேட்டதுமே அவருடைய உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. தம் தலைவரும் போதகருமான இயேசுவே தம் முன்னால் நிற்கிறார் என்னும் எண்ணம் தோமாவின் இதயத்தை நிரப்பிவிட்டது. அப்போது இயேசு தோமாவைப் பார்த்து, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்கிறார்.

இங்கே ''பேறுபெற்றோர்'' எனக் குறிப்பிடப்படுவோர் நாம்தாம். நாம் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரடியாக நம் கண்களால் காணவில்லை. அவருடைய குரலை நாம் நம் காதுகளால் கேட்கவில்லை. அவரை அணுகிச் சென்று தொட்டுப்பார்க்கவும் நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் நாம் இயேசுவை நம் ஆண்டவராக, உயிர்த்தெழுந்து நமக்கு உயிர் வழங்கும் இறைவனாக ஏற்கிறோம். தோமாவுக்குத் தோன்றிய ஐயம் நமக்கும் தோன்றலாம். ஆனால் ஐயத்தைத் தவிர்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு நம் இதயச் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தோமா இயேசுவைத் தம் ''ஆண்டவர்'' என்றும் ''கடவுள்'' என்றும் அறிக்கையிட்டார் (காண்க: யோவா 20:28). அதுபோல நாமும் இயேசுவை நம் மீட்பராக ஏற்று, அவருடைய வழியில் நடந்துசென்றிட அழைக்கப்படுகிறோம். உண்மையிலேயே நாம் ''பேறுபெற்றோர்''.

மன்றாட்டு:

உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். ஆமென்.