முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்க்கா காலம் 2021-04-08
பாஸ்கா எண்கிழமை வியாழன்
முதல் வாசகம்
வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26
கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக்கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்றுச் சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒருசேர ஓடிவந்தனர். பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: ``எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்?
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.
இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.
அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்.
அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம்வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக் குறித்துக் கூறியிருந்தார்.
மோசேயும், `உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிட மிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்' என்று கூறியுள்ளார்.
சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், `உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்' என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்களே.
ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீய செயல்களை விட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
திபா 8: 1ய,4. 5-6. 7-8
ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி
5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படிச் செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி
7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48
அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.
அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்கு உள்ளாகி இருந்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம், ``உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?'' என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ``மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே'' என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார்.
அவர் அவர்களிடம், ``மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''சீடர்களோடு இயேசு பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரைக் கண்டுகொண்டார்கள்'' (லூக்கா 24:30-31)
உயிர்த்தெழுந்த இயேசு பல சீடர்களுக்குத் தோன்றினார். அவ்வாறு இயேசு தோன்றிய நிகழ்ச்சிகளுள் மிகச் சிறப்பான ஒன்று அவர் எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தது ஆகும் (லூக் 2:13-35). லூக்கா நற்செய்தியாளர் இதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இயேசுவின் இரு சீடர்கள் (அவர்களது பெயர்கள் தரப்படவில்லை) எருசலேமிலிருந்து எம்மாவு என்னும் ஊர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு அடையாளம் தெரியாத ஒரு மனிதரை வழியில் சந்திக்கின்றனர். அவர்தான் இயேசு என்பதை அவர்கள் பிறகே கண்டுகொள்வர். அன்னியராக வந்த மனிதர் சீடர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்கிறார். அங்கே உணவருந்தும் வேளையில் எதிர்பாராத ஓர் அனுபவம் சீடர்களுக்குக் கிடைக்கிறது. அந்த அன்னியர் அப்பத்தை எடுக்கிறார், கடவுளைப் போற்றுகிறார், அப்பத்தைப் பிட்கிறார், அதை அவர்களுக்குக் கொடுக்கிறார். இச்செயல்களைக் கண்ட சீடர்கள் இருவரும் முன்னாளைய அனுபவத்தை நினைத்துப்பார்க்கிறார்கள். அவர்களுக்குப் போதகராக இருந்த இயேசு செய்த செயல்கள் அனைத்தையும் இந்த அன்னியரும் செய்கிறார் என்பதைத் தொடர்புபடுத்துகின்றனர். அந்த நேரத்திலேயே அவர்களுடைய ''கண்கள் திறக்கின்றன''. அவர்களும் இயேசுவை ''அடையாளம் கண்டுகொண்டார்கள்''.
பெயர் குறிப்பிடப்படாத இந்த இரு சீடர்களின் கதை நம் கதை ஆகும். இயேசுவை நாம் நம்புகிறோம். அவர் நம்மோடு நடமாடி, நம்மோடு பழகிச் செயல்படாவிட்டாலும் அவர் நம்மோடு தங்கி வாழ்கின்றார் என்பதை நம் கண்கள் காண வேண்டும். நம் கண்கள் ''திறக்கப்பட வேண்டும்''. குறிப்பாக இயேசு இரு செயல்களைச் செய்கிறார். முதலில் மறைநூலை அவர் சீடர்களுக்கு விளக்கி உரைக்கிறார். பின்னர் சீடர்களோடு ''அப்பம் பிட்டுப் பகிர்ந்துகொள்கிறார்''. இந்த இரு நிகழ்ச்சிகளும் திருப்பலியின் போது நிகழ்கின்றன. இறைவார்த்தை அங்கே வாசித்து விளக்கப்படுகிறது. அப்பம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. கடவுளின் வார்த்தையைக் கேட்டு, இயேசு நமக்கு அளிக்கின்ற அவருடைய உடல் என்னும் உணவை உட்கொண்டு நாம் வளம்பெறுகிறோம். திருச்சபையில் இயேசு தொடர்ந்து உடனிருக்கிறார் எனவும் செயல்படுகிறார் எனவும் நாம் நம்புவதை ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக நாம் நினைவுகூர்கிறோம், இயேசுவோடு ஆழ்ந்த விதத்தில் ஒன்றிணைகிறோம். இயேசுவிடமிருந்து நாம் பெறுகின்ற வாழ்வு பிறரோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
மன்றாட்டு:
இறைவா, எங்களோடு நீர் தங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.
|