யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம்
2021-03-31

புனித வார புதன்




முதல் வாசகம்

இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 50:4-9

4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை.6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.8 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்.9 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்: புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் தாரும்
திருப்பாடல்கள் 69:7-9, 20-21, 30, 32-33

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.8 என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.

20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காக தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்.

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.


நற்செய்திக்கு முன் வசனம்

ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26:14-25

14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,15 ' இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.18 இயேசு அவர்களிடம், ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ' எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ' என்றார்.19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ' ஆண்டவரே, அது நானோ? ' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.23 அதற்கு அவர், ' என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ' என்றார்.25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ' ரபி, நானோ? ' என அவரிடம் கேட்க இயேசு, ' நீயே சொல்லிவிட்டாய் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?"

தானும் தான் வாழும் சமூகமும் அழிவதற்குக் காரணம் சுயநலம். எனக்கு என்ன லாபம். எனக்கு என்ன தருவார்கள். நானும் என்னுடையவர்கள் மட்டுமே வாழ வேண்டும், வளர வேண்டும். இந்தச் சுயநலத்திற்குச் அறுசுவை சேர்ப்பதாக அமைந்துவிடுகிறது பணம் அதோடு சேரும்போது. பணமும் சுயநலமும் எந்த பழி பாவத்திற்கும் தயாராகிறது. பணத்திற்காக, சுயநலத்திற்காக, பெற்ற தாயை, வளர்த்து உருவாக்கிய தகப்பனை, உருதுணையாய் இருக்கும் உடன்பிறப்பை ஒதுக்க ஒடுக்க ஒழிக்க மிகச் சாதாரணமாக முன்வரும் மகன்கள் இல்லையா! பணத்திற்காக பதவிக்காக பாதுகாப்பிற்காக அடுத்தவனை விலைபேசி,தான் விலைபோகும் எட்டப்பன்கள் இல்லையா காட்டிக்கொடுத்தவன் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. சுயநலவாதி சுயம் கண்டதாகச் சான்று இல்லை. பணத்திற்காக பண்பை, பண்பாட்டை, பாசத்தை பரிதவிக்கவிட்டவன் பாராண்டதாக பாரம்பரியம் இல்லை. கூட இருந்து குழி பறிக்கும் குள்ள நரிகள் கோட்டைகட்டிய கதை இல்லை.முதுகில் குத்தியதால் முகவரிபெற்றவர் இல்லை. சந்தர்ப்பவாதிகள் சரித்திரம் படைத்தற்கான அறிகுறிகளே இல்லை. ஆனால் காட்டிக்கொடுத்தவன் காட்டிக்கொடுக்கப்பட்டான், கொல்லப்பட்டான் என்ற செய்திகள் பல பல. விலை பேசியவன் விலைபோனான் என்ற செய்திகள் சகஐம்.சுயநலவாதி, சந்தர்ப்பவாதி தன்னையே அழித்துக்கொண்டான், தற்கொலை செய்துகொண்டான் என்ற நிகழ்வுகள் நிஐம். காட்டிக்கொடுத்து சொத்து செல்வம், பெயர் புகழ், குவித்தவன் யாருமில்லை. இதனால் வாழ்ந்தவனும் இல்லை. மாறாக கூடி குவித்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்..

மன்றாட்டு:

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடலை இறைவனின் ஆலயமாக மாற்றியதுபோல, நாங்களும் எங்கள் உடலை உம்மை மாட்சிமைப்படுத்த பயன்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.