யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் சனிக்கிழமை
2021-03-27
முதல் வாசகம்

நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன்
எசேக்கியல் நூலிலிருந்து வாசகம் 37:21-28

21 அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன்.22 இஸ்ரயேலின் மலைகள்மிது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்.23 அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்தக் குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் என24 என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசானய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்: என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர்.25 நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும் அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.26 நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன்.27 என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்: நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்.28 என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்
எரேமியா 31:10-13

10 மக்களினத்தாடரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்: 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.

11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்: அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்: தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்: அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்: அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்

13 அப்பொழுது கன்னிப்பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்: அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்: அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்: அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்: துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:45-57

45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.46 ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.47 தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, ' இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?48 இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே! ' என்று பேசிக் கொண்டனர்.49 கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், ' உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை ' என்று சொன்னார்.51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காவும்,52 தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.53 ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.54 அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். ' அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.57 ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

பலருக்காக ஒரு மனிதன் !

தலைமைக் குரு கயபா இறைவாக்காக அறிவித்த “இனம் முழுதும் அழிந்துபோவதைவிட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்னும் வார்த்தைகளை இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். கயபா கயமை நிறைந்த உள்ளத்தோடு இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், நற்செய்தியாளர் அதனையும் இறைவாக்காகவே எடுத்துக்கொள்கிறார். மனித இனத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஓர் இனத்திற்காக உயிர் துறந்த தலைவர்கள் பலரைப் பார்க்கலாம். அல்லது ஒரு குடும்பத்தைக் காக்க உயிர் துறந்த தனி மனிதர்களையும் சந்திக்கலாம். சாதாரண மனிதர்களுக்கும், மாமனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: பிறர் வாழ தங்களைக் கையளிப்பவர்கள் மாமனிதர்கள். இயேசு இந்த உலக மாந்தர் அனைவரும் வாழ்வுபெற, மீட்படைய தம்மையே கையளிக்க முன் வந்தார். இந்த மீட்பின் நிகழ்வுகளைக் கொண்டாட இருக்கும் நாம், நமது வாழ்வில் பிறர் வாழ நாம் என்ன செய்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொள்வோம். நமது உயிரைக் கொடுக்காவிட்டாலும் தாழ்வில்லை, பிறர் வாழ்வு பெற, பிறர் விடுதலை அடைய, சிறிய இழப்புகளை ஏற்றுக்கொள்ள முன் வந்தாலே, அது பெரிதான செயலாக இருக்கும். புனித வாரம் நெருங்கி வரும் இந்நாள்களில் இந்த சிந்தனையை மனதில் கொள்வோம்.

மன்றாட்டு:

எங்கள் வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உம் அன்புத் திருமகன் இயேசு நாங்கள் மீட்படைவதற்காக தாம் இறக்க முன் வந்தார். நன்றி செலுத்துகிறோம். அவரைப் பின்பற்றி நாங்களும் பிறர் வாழ்வடைய எங்களையே கையளிக்கும் தாராள மனதை எங்களுக்குத் தந்து எம்மை வலிமைப்படுத்தும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.