யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2021-03-21

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம். 31:31-34,பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்:,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 5:7-9,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்புநிறைந்த சகோதரர்களே! சகோதரிகளே நீங்கள் அனைவரும் இயேசுக் கிறிஸ்துவால் குறைகள், தீமைகள் நீங்கி நலம் பெருக வாழ்த்துகிறேன். இன்று தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு.

ஆண்டவர் இயேசு துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, நாம் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் என்னும் மறையுண்மைகள், நாம் எவ்வாறு நிறைவடையலாம், மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்கு வழி வகுக்கலாம் என்பதனை தெளிவான செய்தியாக வழங்குகின்றன. அத்தோடு என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்,அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன் என்னும் ஆசீர்வாதமும், நம்பிக்கையும் வழங்கப்படுகின்றன.

நாமும் இயேசு காட்டிய வழியைப் பின்பற்றி தாழ்ச்சியுளவர்களாகவும், இறைப்பற்று கலந்த அச்சமுடையவர்களாகவும், இறைவனையே நம்பி வாழும் மக்களாகவும் இருந்து செயற்படவும், நாம் உண்மையாகவே கடவுளின் மக்களாக வாழவும் வரம் கேட்டு, செபித்தவர்களாய் இத் திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், அவர்களுடைய பாவ ங்களை; நினைவு கூரமாட்டேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம். 31:31-34

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்துகொள்ளும் ' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்: அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல் திபா. 51:1-2,10-13
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்:

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்: உமது அளவற்ற இரக்கத் திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங் கும் படி என்னைக் கழுவியருளும்: என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்: பல்லவி:

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்: உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி:

உம் மீட்பின் மகிழ்ச்சயை மீண்டும் எனக்கு அளித்தருளும்: தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்: பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி:

இரண்டாம் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 5:7-9

சகோதர சகோதரிகளே, அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, 'தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர், என்கிறார் ஆண்டவர். (யோவா. 12:26) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33

அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்: அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, 'மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார். மேலும் இயேசு, 'இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், 'மாட்சிப்படுத்தினேன்: மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள்' அதைக் கேட்டு, 'அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், 'அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, 'இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது: இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார். தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பணியாளரைப் பலப்படுத்தம் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்கும் உமது வழிகளைக் கற்பித்து, புதுப்பிக்கும் ஆவியை அவர்களிடம் உருவாக்கி, இயேசுவைப் போல் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, மகிழ்ச்சியூட்டும் இறையரசைக் கட்டியெழுப்ப வேண்டிய அருளை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாவங்களை நினைவு கூராத தந்தையே இறைவா!

நாங்கள் ஒவ்வொருவரும் இத்தவக்காலத்தில் இறைப்பற்றுக் கலந்த அச்சம் கொண்டவர்களாகவும், தாழ்ச்சியுள்ளவர்களாவும், உமக்குத் தொண்டு செய்வதில் ஆர்வமுள்ளவர்களாகவும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!

கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும்,மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு அனைத்தையும் கற்றுத்தரும் தந்தையே!

உம்மைப் பற்றிய அறிவிலும், ஞானத்திலும் நாமும், எமது பிள்ளைகளும் வளர எமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவார்த்தையையும், திருச்சபைப் பணியாளர்கள் வழியாக நீர் வெளிப்படுத்தும் செய்திகளையும் எம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து அறிவிலும், ஞானத்திலும் வளர நாம் முயற்சிகளை மேற்கொள்ள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளைனோரை பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை கொள்வோரை சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே!

பாடுகள், துன்பம், சாவு வழியாகவே மாட்சிமை மிகுந்த உமது விண்ணக மகிழ்ச்சியில் பங்கேற்க முடியுமெனும் உண்மையை உய்த்துணர்ந்து நாங்கள் அதற்கு தகுதியுள்ளவர்களாக எம்மை உருமாற்ற வரமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் மக்களைக் கண்ணோக்கியருளும். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவும், இந்நோய் முற்றிலும் நீங்கிடவும், இத்தவக்காலத்தில் உம் மக்கள் அனைவரும் ஆலயம் சென்று, ஒன்றிணைந்துச் செபிக்கவும் தேவையான அருளை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''கிரேக்கர் சிலர்... பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டுக்கொண்டார்கள்'' (யோவான் 12:20-21)

இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்கள் யூதர்கள் மட்டுமல்ல, பிற இனத்தாரும் அவரை ஏற்றனர் என்னும் உண்மையை இங்கே யோவான் நற்செய்தி தெரிவிக்கிறது. இயேசு எருசலேம் நகருக்கு வருகிறார். அங்கே வழிபடுவதற்கென்று யூதர்களும் ''சில கிரேக்கர்களும்'' வருகின்றனர். இங்கே கிரேக்கர்கள் எனக் குறிக்கப்படுவோர் ''பிற இனத்தார்'' ஆவர். அவர்கள் இயேசுவைத் தேடி வருகிறார்கள். நேரடியாக அவர்கள் இயேசுவிடம் போகவில்லை. மாறாக, இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவை அவர்கள் அணுகுகிறார்கள். ''ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்பது அவர்களது வேண்டுகோள்.

இங்கே பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. தொடக்க காலத் திருச்சபை இயேசுவின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் உலக மக்கள் அனைவருக்குமே உரியது என்னும் உண்மையை உணர்ந்தது. ஆகவே, இயேசுவைத் தேடி எல்லா மக்களுமே வருகிறார்கள். அவ்வாறு வருவோரை இயேசுவிடம் கொண்டுசெல்லும் பணி இயேசுவின் சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிலிப்பு இங்கே இயேசுவின் சீடர்களுக்கு அடையாளம். இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் பிற மக்களையும் இயேசுவிடம் இட்டுச் செல்ல வேண்டும். ஏனென்றால் ''இயேசுவைக் காண விரும்பி'' வருகின்ற மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் எழுகின்ற தாகத்தைத் தணிக்க வேண்டும் என்றால் அவர்களை வாழ்வின் ஊற்றாகிய இயேசுவிடம் நாம் இட்டுச் செல்ல வேண்டும். இயேசுவே நமக்கு வாழ்வளிக்கின்றார். மண்ணில் விழுந்து மடிகின்ற கோதுமை மிகுந்த விளைச்சலைத் தருவதுபோல, சிலுவையில் இறக்கின்ற இயேசு நமக்கு நிலைவாழ்வு அளிக்கிறார். அவரை நாம் அணுகிச் சென்று வாழ்வு பெறுவதோடு பிறரையும் அவரிம் கூட்டிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நற்செய்தியின் தூதுவர்களாக எங்களை மாற்றியருளும்.