யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 4வது வாரம் புதன்கிழமை
2021-03-17
முதல் வாசகம்

சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 49:8-15

ஆண்டவர் கூறுவது இதுவே: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்: விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்: நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன்.9 சிறைப்பட்டோரிடம், புறப்படுங்கள் என்றும் இருளில் இருப்போரிடம் வெளிப்படுங்கள் என்றும் சொல்வீர்கள். பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்: வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர்.10 அவர்கள் பசியடையார்: தாகமுறார்: வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்: அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார்.11 என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்: என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.12 இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்: சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள்.13 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.14 சீயோனோ, ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்: என் தலைவர் என்னை மறந்து விட்டார் என்கிறாள்.15 பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்
திருப்பாடல்கள் 145:8-9, 13-14, 17-18

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.

13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.


நற்செய்திக்கு முன் வசனம்

காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:17-30

17 இயேசு அவர்களிடம், ' என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன் ' என்றார்.18 இவ்வாறு அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.19 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.20 தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.21 தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.22 தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்.23 மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.24 என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25 காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.26 தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.27 அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.28 இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு29 வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

தந்தையைப் போல !

“நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை” என்பது பழமொழி. ஆனால், இயேசு தந்தையைப் போல வாழ்ந்தார், தந்தையைப் போல செயலாற்றினார். எனவேதான், அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியபோது, “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்” என்று கூறினார். வானகத் தந்தைக்கு ஓய்வு தேவையில்லை. அவர் ஓய்வின்றி தமது பேரன்பை, இரக்கத்தை நம்மீது பொழிந்துகொண்டிருக்கிறார். இயேசுவும் ஓய்வின்றி உழைத்தார். ஓய்வு நாளிலும் நோயாளர்களைக் குணமாக்கினார், பாவிகளை மன்னித்தார். நன்மை செய்வதற்கு ஏது ஓய்வு?

ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, நாமும் தந்தையைப் போல வாழ்வோம். “உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவராக வாழுங்கள்” என்னும் வாக்கிற்கேற்ப நாமும் நிறைவுள்ளவர்களாக வாழ்வோம். தந்தை ஓய்வின்றி இரக்கம் பொழிவதுபோல, நாமும் பரிவின் செயல்களை, அன்புச் செயல்களை ஓய்வின்றி செயல்படுத்துவோம்.

மன்றாட்டு:

ஓய்வில்லா ஆண்டவரே, அன்பு செய்வதற்கு, இரக்கம் காட்டுவதற்கு, பரிவு கொள்வதற்கு ஓய்வு எடுக்காமல், எப்போதும் உழைக்கும் ஆர்வத்தை எங்களுக்குத் தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.