யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2021-03-15
முதல் வாசகம்

புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 65:17-21

17 இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்: முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை: மனத்தில் எழுதுவதுமில்லை.18 நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். 19 நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்: என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்: இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. 20 இனி அங்கே நில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது: தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்: ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.21 அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்: திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்
திருப்பாடல்கள் 30:1, 3-5, 10-12

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். 4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.

10 ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.

12 ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:43-54

43 அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார்.44 தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.45 அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.48 இயேசு அவரை நோக்கி, ' அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள். ' என்றார்.49 அரச அலுவலர் இயேசுவிடம், ' ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் ' என்றார்.50 இயேசு அவரிடம், ' நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.52 ' எத்தனை மணிக்கு நோய் நீங்கியது? ' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ' நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது ' என்றார்கள்.53 ' உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படாத இறைவாக்கினர்கள் !

சொந்த ஊரில், சொந்த வீட்டில், ஏன் சொந்த நாட்டில் ஏற்பிசைவும், பாராட்டும் பெறாத பலரை நாம் பார்த்திருக்கிறோம். எத்தனையோ கலைஞர்கள், படைப்பாளர்கள், அறிவியலாளர்கள் தக்க ஊக்குவிப்பு இல்லாததால், சோர்வடைந்து அடங்கிப் போவதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவேளை நமக்கே கூட அத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். என்ன காரணம்? குயஅடையைசவைல டிசநநனள உழவெநஅpவ என்னும் பொன்மொழி ஆங்கிலத்தில் விளங்குகிறது. கூடவே இருப்பது ஏளனத்தை உருவாக்கும் என அதனை மொழி பெயர்க்கலாம். ஒருவர் நமக்குத் தெரிந்தவராக இருப்பதனாலேயே, அல்லது அவரது பிறப்பு, குடும்பப் பின்னணி, சில கொடுமையான நேரங்களில் ஒருவரின் சாதி- இவற்றைக் கொண்டு அவரைப் பார்ப்பதாலேயே அவரது திறன்களை, ஆற்றல்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நமக்குக் குழந்தைகளின் பார்வை, அல்லது இறைவனின் பார்வை தேவை. குழந்தைகள்தாம் எந்தப் பின்புலமும், பின்னணியும் இன்றி, முற்சார்பு எண்ணங்கள் எதுவுமின்றி பிறரை, நிகழ்வுகளை, இயற்கையைப் பார்க்கின்றனர், வியக்கின்றனர், ரசிக்கின்றனர், பாராட்டுகின்றனர், இறைவனும் அவ்வாறே. நாமும் நமது முற்சார்பு எண்ணங்களைக் களைந்து, மாந்தரை அவரது இயல்பை, திறன்களை மட்டுNமு கண்டு பாராட்ட முன்வருவோம்.

மன்றாட்டு:

சொந்த ஊரில் புறக்கணிக்கப்பட்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். சாதீய நோயால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் பணியை நாங்கள் செய்ய உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். முற்சார்பு எண்ணங்களைக் களைந்து, மானிடரைக் குழந்தை உள்ளத்தோடு பார்க்கும் புதிய பார்வையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.