யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் சனிக்கிழமை
2021-03-13
முதல் வாசகம்

வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்
ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6:1-6

வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்: நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்: நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.2 இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்: மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்: அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.3 நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக: அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது: மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார் என்கிறார்கள்.4 எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!5 அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்: என் வாய்மொழிகளில் அவர்களைக் கொன்று விட்டேன்: எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது.6 உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்: எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.
திருப்பாடல்கள் 51:1-2, 16-19

1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.2 என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.

18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!19 அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.


நற்செய்திக்கு முன் வசனம்

தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18:9-14

9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

இறைபுகழ்ச்சியிலும் ஆபத்து !

இயேசுவின் ஆன்மீக ஆழம் மற்றும் அவரது படைப்பாற்றலுக்கு அழகியதோர் எடுத்துக்காட்டாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் இறைவேண்டல் பற்றிய அவரது உவமை. செபம், இறைவேண்டல் எவ்வாறு இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கக்கூடாது என்பதை இதைவிட அழகாக யாரும் கூறிவிடமுடியாது என்னும் அளவுக்கு இயேசுவின் உவமைவழி போதனை அமைந்திருக்கிறது. இறைவேண்டலில் ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ளவேண்டும் என்னும் பகுதி எளிதான போதனையே. ஆனால், இறைபுகழ்ச்சி, நன்றி செபத்தில்கூட ஆபத்து அடங்கியிருக்கலாம் என்பது கொஞ்சம் புதிதான போதனையே. கோவிலுக்குச் செல்லும் பரிசேயர் இறைவனுக்கு நன்றி செபம் சொன்னார். "உமக்கு நன்றி செலுத்துகிறேன்" என்னும் வார்த்தைகளில் அவரது இறைபுகழ்ச்சி வெளிப்படுகிறது, ஆனால், அந்தப் புகழ்ச்சி, நன்றியின் அடிநாதமாக தற்பெருமையும், தாழ்ச்சியற்ற தன்மையும் அடங்கியிருந்தது. எனவே, அவரது செபம் ஏற்கப்படவில்லை என அடித்துச் சொல்கிறார் ஆண்டவர். எனவே, செப ஆர்வலர்கள், செபக் குழு உறுப்பினர்கள், அன்றாடம் செபித்து மனநிறைவுகொள்வோராகிய நாம் அனைவரும் விழிப்புடன் இருப்போம். ஒருவேளை நமது இறைபுகழ்ச்சியும், நன்றிப் பாடல்களும் இறைவனுக்கு ஏற்புடைமை ஆகாத வாய்ப்பு இருக்கிறது. எனவே, நம்மையே தாழ்த்திக்கொள்ளும், பிறரது வாழ்வை, பணிகளை, ஆன்மீகத்தைக் குறைசொல்லாதிருக்கக் கற்றுக்கொள்வோம்.

மன்றாட்டு:

வானகத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களது செபமும், வேண்டுதலும் உமது திருமுன் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் எங்கள் வாழ்வும், மனநிலைகளும் அமைய அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.