யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் புதன்கிழமை
2021-03-10




முதல் வாசகம்

நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4:1, 5-9

1 இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்..5 நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.6 நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.7 நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?8 நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா?9 கவனமாய் இருங்கள்: உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல்கள் 147:12-13, 15-16, 19

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.

15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்.

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்


நற்செய்திக்கு முன் வசனம்

விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:17-19

17 ' திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.18 ' விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

கடைப்பிடித்துக் கற்பிக்கிறவர் !

இறையாட்சியின் செய்திகளை அறிவிக்கிறவர்களாக வாழவே இயேசு சீடர்களைத் தேர்ந்துகொண்டார். அச்சீடர்களை இரு பிரிவினராகப் பிரிக்கிறார் இயேசு. அவரது கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி, அவ்வாறே பிறருக்கும் கற்பிக்கிறவர்கள் விண்ணரசில் சிறியவர் என அழைக்கப்படுவர். ஆனால், அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து, அப்படியே பிறருக்கும் கற்பிக்கிறவர் பெரியவர் எனப்படுவர். இன்றைய திருச்சபையில் நாம் சிறியோர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், கடைப்பிடித்துக் கற்பிக்கும் பெரியோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இறைவனின் கட்டளைகளை முழு மனதோடு கடைப்பிடிப்பது என்பது மிகப் பெரிய சவால். அதற்கு இறையாசி தேவை. கடைப்பிடிப்பதைப் பிறருக்கு அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்புப் பணி. அப்பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோமாக.

மன்றாட்டு:

கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கின்ற கட்டளைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தைத் தந்தருளும். அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.