யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-03-07

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 20:1-17,பதிலுரைப்பாடல் திபா. 19:7-10,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிரந்து வாசகம். 1:22-25,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்புள்ளம் கொண்டவர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். சென்ற வாரம் இயேசுவை நாம் மலைமீது சந்தித்தோம். உருமாறி, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசு அவர். தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று இயேசுவைக் கோவிலில் சந்திக்கிறோம்.

"யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார் என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. தூய்மையான இறைவன் என்றும், எல்லாம் தூய்மையுடன் இருப்பதையே விரும்புகிறார். இணைச்சட்டநூல் 23: 14 கூறுவதுபோல அவர் வரும் இடம் தூய்மையானதாக இருக்கவேண்டும் என விரும்புகிறார். எனவே எளிமையும், தூய்மையும் நிறைந்த இடம்தான் ஆண்டவர் வரும் இடம். குழந்தைகள் தூய உள்ளம் கொண்டிருப்பதாலேயே நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள் என்று கூறினார். தூய வாழ்வு இறைவனோடு இருப்பதற்கும், இறைவன் தங்கியிருப்பதற்கும் அவசியமாகிறது. எனவே இறைவனுடன் இணைந்திருக்க விரும்பும் நாம் தூய்மை பெற வேண்டும் என்ற சிந்தனைகளை இன்றைய வழிபாட்டு அருள்மொழிகளோடு இணைத்து ஆய்வு செய்து வாழ்வாக்க முயல்வோம். வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப் பெற்றது.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 20:1-17

மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
பதிலுரைப்பாடல் திபா. 19:7-10

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி:

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை: அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி:

ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி:

அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை: தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. பல்லவி:

இரண்டாம் வாசகம்

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அவரது சிலுவை யூதருக்குத் தடைக்கல்: அழைக்கப்பட்டவருக்கோ கடவுளின் ஞானம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிரந்து வாசகம். 1:22-25

சகோதர சகோதரிகளே, யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்: கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது: மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். (யோவா. 3:16) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25

அக்காலத்தில், யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்: கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்: அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்: ஆடு மாடுகளையும் விரட்டினார்: நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்: என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். 'உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், 'இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ; என்றார். அப்போது யூதர்கள், 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர். பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை: ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

இரக்கம் நிறைந்த எம் இறைவா!

திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயக்கவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரை பாதுகாத்து, அவர்கள் உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நிறைவு தருபவரானஎங்களை உமது கோவிலாகப் படைத்து, எங்களிலே வாழ்வதில் மகிழும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.

எங்களின் உடலும், பிறரது உடல்களும் மாண்புக்குரியவை, மதிப்புக்குரியவை என்பதை உணரவும், அந்தக் கோவில்களை வன்முறைக்குட்படுத்தாமல் வாழவும் எங்களுக்கு அருள் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுன்றோம். இறைவா,

ஏழைகளின் அருள் துணையே எம் இறைவா!

ஏழைகளுக்கு உதவுகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்ற வார்த்தைக்கு ஏற்ப எம் சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்றுப் பகர, ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் திருஅவையில் இன்னும் ஒரு கொடிய நோயாகவே இருக்கின்றது. இந்த நிலை மாற நீர் அனைத்து மாந்தரும் மனமாற்றம் பெற்றுத் தளரா மனதுடன் ஏழைமக்களுக்கு உதவி புரியத் தாராள மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுன்றோம்.

நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா!

வேதனை நிறைந்த எங்கள் மனங்களில் எதிர்கால வாழ்வை நினைத்து, கிடைத்த வாழ்வை, பெற்ற மகிழ்ச்சியை, உறவுகளை இழக்காமல் எம் குடும்பங்களில் ஒற்றுமையையும், மற்றவர்களை மன்னித்து எம் சகோதரச் சகோதரிகளாய் பாவித்துச் சாமாரியப் பெண்ணைப் போல எங்கள் தவறுகளை ஏற்று அனைவரையும் அன்புப் பாரட்ட வேண்டிய மனஉறுதியையும், அவற்றைச் செயலில் காட்டும் விவேகத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை கொள்வோரை சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே!

பாடுகள், துன்பம், சாவு வழியாகவே மாட்சிமை மிகுந்த உமது விண்ணக மகிழ்ச்சியில் பங்கேற்க முடியுமெனும் உண்மையை உய்த்துணர்ந்து நாங்கள் அதற்கு தகுதியுள்ளவர்களாக எம்மை உருமாற்ற வரமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவருக்கு எல்லாம் மருத்துவராகிய எம் இறைவா!

உலகமெங்கும் பரவி வரும் தொற்று நோயின் கொடுமைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்றும். நோயைக் கட்டுபடுத்தவும், அவர்களுக்குப் பணிவிடைச் செய்யும் அனைவரையும் அந்த நோயின் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து, உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும், மன உறுதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்'' (யோவான் 2:15)

இயேசு ''கோவிலைத் தூய்மைப் படுத்திய'' நிகழ்ச்சியை எல்லா நற்செய்தியாளரும் பதிவுசெய்துள்ளனர். ஆயினும், யோவான் மட்டுமே இயேசு கோவிலில் சென்று அங்கே வியாபாரம் செய்தவர்களையும் நாணயம் மாற்றுவதில் ஈடுபட்டிருந்தோரையும் துரத்திய நிகழ்ச்சி இயேசுவின் பணிக்காலத் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறுகிறார். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சி இயேசுவின் பணிக்கால இறுதியில் நடந்ததாகவும் உடனேயே இயேசுவின் எதிரிகள் அவரைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியதாகவும் குறிப்பிடுகின்றனர். எருசலேம் கோவில் யூதர்களுக்கு மிகப் புனிதமான இடம். அங்கு மட்டுமே யாவே கடவுளுக்குப் பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. அங்குதான் கடவுளின் பிரசன்னம் உண்டு என அவர்கள் நம்பினார்கள். அத்தகைய தூய்மை நிறைந்த இடம் ''சந்தை'' போல் ஆகிவிட்டதைக் கண்டு வருந்துகிறார் இயேசு. கடவுளின் இல்லமே கோவில் என்றால் கோவிலை அவமதிப்பது கடவுளையே அவமதிப்பதாகும் என இயேசு கூறினார். ஆனால், இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தியதை ஒரு சட்ட மீறலாகக் காண்கிறார்கள் அவருடைய எதிரிகள். அப்போது இயேசு ''இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். தம் உடலாகிய கோவிலைப் பற்றியே இயேசு இவ்வாறு கூறினார் என யோவான் குறிப்பிடுகிறார் (யோவா 2:21).

இயேசுவின் உடலே கோவில் என்பதன் பொருள் என்ன? இயேசுவிடத்தில் கடவுள் உறைகின்றார். எனவே எருசலேம் கோவில் அழிந்துபோனால் அது இருந்த இடத்தில் இயேசு என்னும் கோவில் எழும்பும். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்று எழுவார். இனிமேல் கடவுளை வழிபடுவோர் அக்கடவுளை இயேசுவில் கண்டுகொள்வர். இந்த ஆழ்ந்த உண்மையை இயேசு ''கோவிலைத் தூய்மைப் படுத்திய'' நிகழ்ச்சி வழியாக உணர்த்தியதாக யோவான் பதிவுசெய்துள்ளார். இன்று நாம் கடவுளை எங்கே வழிபடுவது? நம் கோவில்களில் நற்கருணை உள்ளது. அதில் இயேசுவே உடனிருக்கிறார் என்பது நம் நம்பிக்கை. ஆயினும் கடவுளின் இல்லம் வெறும் கட்டடம் அல்ல. இயேசுவே கடவுளின் இல்லம். இயேசுவை ஏற்போர் அவரில் உறைகின்ற கடவுளை ஏற்பர். இயேசுவை ஏற்போர் இவ்வுலகில் இயேசுவின் சாயலாக விளங்குகின்ற மனிரை ஏற்பர்.

மன்றாட்டு:

இறைவா, மனிதர் என்னும் கோவிலில் நீர் உறைகிறீர் என நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.