திருவழிபாடு ஆண்டு - B 2021-02-28
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18,திபா 116: 10,15. 16-17. 18-19 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34
,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10
)
திருப்பலி முன்னுரை
அழைக்கப்பெற்றவர்களே,
மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு நாம் கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை நாம் உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசுவின் சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசகம்
நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18
அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்'' என்றார்.
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.
அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று `ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்.
இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார்.
ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ``ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்.
ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்.
உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்'' என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
திபா 116: 10,15. 16-17. 18-19
`மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி
16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி
18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி
இரண்டாம் வாசகம் கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34
சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்?
அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''
அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10
அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.
அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்'' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், ``மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, `இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! இத்தவக்காலத்தில் துன்புறும் உம் திருச்சபைக்காக வேண்டுகிறோம். உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டுத் துன்பங்களையும், தீவிரவாத்தையும் எதிர்கொள்ளும் திருச்சபையின் பணியாளர்கள் அனைவருக்கும் துன்பத்தால் துவண்டுபோய் விடாதபடியும், மனவிரக்தியில் வெந்துப் போகாதபடி இருக்கும்படியும் இருக்கவும், ஆபிரகாம் போல் தளராத நம்பிக்கையில் வாழவும் வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற உம்மையே எளிமையாக்கிக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எவ்வளவு மாட்சி நிறைந்த நீர், எவ்வளவு எளிமையாய், பணிவாய் பணியாற்றினீர். இவ்வாறு, தந்தைக்குப் பெருமை சேர்த்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் உம்மைப் போல தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றவும், இறைத் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கவும் அருள்தார வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நிறைவு தருபவரான இறைவா, இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்டங்களால் மன அமைதியின்றி தவிக்கும் மக்கள் அனைவரும் உமது வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, உமது மீட்பில் நிறைவு காண்பவர் களாய் வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களது உண்மையான சாயலை, மாட்சியைக் கண்டுகொள்ளும் அனுபவங்களை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் நாங்கள் செபத்திலும், தவ முயற்சிகளிலும் உம்மோடு ஒன்றித்து, உருமாற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைய ஆபிரகாம் கொண்ட பொறுமையும், நம்பிக்கையும் எங்கள் குடும்பத்தார் அனைவரும் உணர்ந்து, துன்பத்தின் முடிவில் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பெற இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்தி இறைமகன் இயேசுவைப்போல் பிறருக்காக உழைத்திடத் தேவையான நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நம்பிக்கை கொள்வோரை சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! பாடுகள், துன்பம், சாவு வழியாகவே மாட்சிமை மிகுந்த உமது விண்ணக மகிழ்ச்சியில் பங்கேற்க முடியுமெனும் உண்மையை உய்த்துணர்ந்து நாங்கள் அதற்கு தகுதியுள்ளவர்களாக எம்மை உருமாற்ற வரமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மருத்துவருக்கு எல்லாம் மருத்துவராகிய எம் இறைவா! உலகமெங்கும் பரவி வரும் தொற்று நோயின் கொடுமைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்றும். நோயைக் கட்டுபடுத்தவும், அவர்களுக்குப் பணிவிடைச் செய்யும் அனைவரையும் அந்த நோயின் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து, உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும், மன உறுதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
இயேசுவின் உருமாற்றம் !
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நமக்கு இறைமொழி விருந்தாகத் தருகிறது தாய்த் திருச்சபை. இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வுகளின் தொகுப்புதான் உருமாற்ற நிகழ்வு. மொத்தம் எத்தனை நிகழ்வுகள்?
1. மலைமீது இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது,
2. அவரது முகத்தோற்றம் மாறியது.
3. அவருடைய ஆடையும் வெண்மையாக மாறியது.
4. மோசேயும், எலியாவும் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
5. வரவிருக்கும் இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் என்கிறார் நற்செய்தியாளர்.
6. மேகத்திலிருந்து தந்தையின் குரல் ஒலித்து, இயேசுவுக்கு ஒப்பிசைவு கொடுத்தது.
இத்தனை நிகழ்வுகளும் இணைந்ததுதான் இயேசுவின் உருமாற்றம். இயேசுவின் இறைத்தன்மையை, அவருடைய மாட்சிமையை வெளிப்படுத்திய அதே வேளையில், அவருடைய பாடுகளை, கீழ்ப்படிதலையும் சீடர்களுக்கு உணர்த்தியது.
இந்த உருமாற்ற நிகழ்விலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
1. நாம் இறைவேண்டலின் வழியாக, இறைவனோடு நெருக்கமான உறவுகொள்வதன் வழியாக அவருடைய மாட்சியில் பங்குபெறலாம். அவரது சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
2. இறைத் தந்தைக்குப் பணிந்து வாழ்வதன் மூலமே அவருடைய ஒப்பிசைவைப் பெறமுடியும் என்பதை உணரவேண்டும்.
3. துன்பங்கள், தோல்விகள் நிரந்தரமல்ல. அவை வெற்றிக்கான படிக்கட்டுகள். எனவே, துணிவுடன் அவற்றை எதிர்கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இத்தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்வோம்.
மன்றாட்டு:
எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களது உண்மையான சாயலை, மாட்சியைக் கண்டுகொள்ளும் அனுபவங்களை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் நாங்கள் செபத்திலும், தவ முயற்சிகளிலும் உம்மோடு ஒன்றித்து, உரு மாறுவோமாக ஆமென்.
|