யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-02-21

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம். 9:8-15 ,பதிலுரைப்பாடல்: திபா: 25:4-9,திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18 – 22,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 1: 12-15)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கடவுளுக்குரியவர்களே, மீட்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வர வேற்கிறோம். மனமாற்றத்திற்கு தூண்டும் காலமாகிய தவக்காலத்தின் முதல் ஞாயிறை நாம் இன்று சிறப்பிக்கின்றோம். உலகப் பொருட்களால் ஏற்படும் சோதனைகளுக்கு மயங்காமல், கடவுளுக்கு முழு மனதோடு பணிபுரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு திருமுழுக்கு பெற்று, தன் பணிவாழ்வைத் தொடங்கும் முன் பாலை நிலத்தில் தனித்திருந்து இறைவனோடு உறவாடினார். அவ்வேளையில் அலகை அவரை சோதித்தபோது, கடவுளில் முழு நம்பிக்கை கொள்ளும் வழியை நமக்கு காட்டினார். அலகையின் தந்திர மொழிகளில் ஏமாறாமல், அந்த சோதனைகளை இயேசு வெற்றி கொண்டார். அவரைப் பின்பற்றி கடவுளுக்கு எதிராக நம் வாழ்வில் வரும் சோதனை களை முறியடிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவா செய்த உடன்படிக்கை .
தொடக்க நூலிலிருந்து வாசகம். 9:8-15

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: "இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்" பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். "உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது." அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே நீரே எனக்குப் புகலிடம்.
பதிலுரைப்பாடல்: திபா: 25:4-9

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: பல்லவி:

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்: ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்: ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி:

ஆண்டவர் நல்லவர்: நேர்மையுள்ளவர்: ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்: எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி:

இரண்டாம் வாசகம்

இப்போது உங்களை மீட்டகும் திருமுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18 – 22

அன்புற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக் கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர், அதாவது, எட்டுப்பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல: அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்: இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது. அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 1: 12-15

அக்காலத்தில் தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்: அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்: அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது: மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் " என்று அவர் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்களுக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாக இருப்பவரே! எம் இறைவா!

பணம், பதவி, புகழ் போன்ற உலக மாயைகளில் இருந்து விலகி வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கி, உம் மக்களை புனிதத்தின் பாதையில் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!

இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவருக்கும் தந்தையாகிய இறைவா!

ஒரே குடும்பமாகக் கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மைப் பிரதிபலிக்கவும், பிறர் நலனில் அவர்கள் அக்கறை கொண்டு வாழவும், சோதனைகளைச் சுகமான சுமைகளாக மாற்ற உம் வார்த்தைகளின் படி வாழ்ந்திடும் மனத்திடனை அவர்களுக்கு நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா!

எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ இத்தவக்காலம் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!

இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!

கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனை களைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உறவுகளுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே!

நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப் பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''உடனே தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்'' (மாற்கு 1:12-13)

பாலைநிலம் என்பது சோதனை ஏற்படுகின்ற இடம் என்றும், கடவுளைச் சந்தித்து அனுபவம் பெறுகின்ற இடம் என்றும் இரு பொருள் கொண்ட உருவகமாக விவிலியத்தில் வருகிறது. இயேசு திருமுழுக்குப் பெற்றதும் தூய ஆவியால் பாலைநிலத்துக்கு இட்டுச்செல்லப்படுகிறார். ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவை அங்கே ஈர்த்து இழுக்கின்றார். இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை மாற்கு சுருக்கமாகவும், மத்தேயு மற்றும் லூக்கா விரிவாகவும் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மாற் 1:12-13; மத் 4:1-11; லூக் 4:1-13). தம்மைச் சக்திவாய்ந்த மந்திரவாதியாக எண்ணும்படி (கல்லை அப்பமாக்கும் சோதனை) இயேசுவுக்கு சோதனை வருகிறது. தம் உயிருக்கு ஆபத்துவரும் என்றாலும் கடவுள் தம் வல்லமையைக் காட்டட்டுமே என்னும் மூடத் துணிச்சல் கொள்ள அவருக்கு சோதனை வருகிறது (கோவில் உச்சியிலிருந்து கீழே குதிக்கும் சோதனை). உலக செல்வங்களை நல்வழியிலோ தீயவழியிலோ பெற்றிடலாம் என்னும் சோதனை வருகிறது (அலகையை வணங்குவதற்கான சோதனை). இயேசு ஒருவிதத்தில் கடவுளால் சோதிக்கப்படுகிறார் எனலாம். ஆனால் சோதனையின்போது கடவுளின் உடனிருப்பை இயேசு ஒருகணமேனும் மறக்கவில்லை.

இயேசுவின் சோதனைக் காலம் உண்மையிலேயே இறையனுபவக் காலமாக மாறிற்று. நமக்கும் பாலைநிலச் சோதனைகள் வருவதுண்டு. கடவுள் நம்மைவிட்டு அகன்றதுபோன்ற நிலை ஏற்படுவதுண்டு. அவ்வேளையில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உள்ளுணர்வு நம்மைவிட்டு அகன்றுவிடலாகாது. சிலவேளைகளில் நாம் தேடிச் செல்கின்ற பாலைநிலம் கடவுளின் உடனிருப்பை நாம் வேண்டும் என்றே ஒதுக்குகின்ற முயற்சியாக இருக்கக் கூடும். அந்த அனுபவம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்குமே தவிர கடவுளனுபவம் பெற நமக்குத் துணையாகாது. ஆக, உண்மையான பாலைநில அனுபவம் என்பது சோதனை வேளையிலும், துன்பவேளையிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் ஆழ்ந்த உணர்வை நாம் பெறுவதில் அடங்கும்.

மன்றாட்டு:

இறைவா, ஒருபோதும் உம்மை மறவா நிலை பெற எங்களுக்கு அருள்தாரும்.