யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2021-02-14

(இன்றைய வாசகங்கள்: லேவியர் நூலிலிருந்து வாசகம். 13:1-2, 44-46,பதிலுரைப்பாடல்: திபா. 32:1,2, 5,11,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 – 11:1,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே,

நம் ஆண்டவர் பெயரால் பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க அழைப்பு விடுக்கிறது. 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்ற தாழ்ச்சியுள்ள வேண்டுதலை ஆண்டவர் முன் சமர்ப்பிக்க இன்று நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம்மீது கருணை கூர்ந்து, நமக்கு நிறைவான நலன்களைக் கட்டளையிடுவார். நமக்கு வருகின்ற துன்பங்கள், நோய்கள், இடையூறுகளில் கடவுளின் அருட்கரம் நம்மை வழிநடத்த வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.முதல் வாசகம்

தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
லேவியர் நூலிலிருந்து வாசகம். 13:1-2, 44-46

அந்நாள்களில், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது:"ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்." எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே நீரே எனக்குப் புகலிடம்.
பதிலுரைப்பாடல்: திபா. 32:1,2, 5,11

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி:

'என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்: என் தீச்செயலை நான் மறைத்ததில்லை: ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி:

நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்: நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி:

இரண்டாம் வாசகம்

நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்: நீங்கள் என்னைப்போல் நடங்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 – 11:1

சகோதர சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, " நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் " என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! " என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் " என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மருத்துவர் நோயற்றவருக்கு அன்று நோயுற்றவருக்கே தேவை என்று மொழிந்த எம் இறைவா!

நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள்: நீர் அவர்களிடம் ஒப்படைத்துள்ள இறைமக்களை ஆயர்களுக்குரிய பரிவன்போடும், கரிசனையோடும், பொறுப்புணர்வோடும் அன்பு செய்து நிறையுண்மையை நோக்கி வழிநடாத்திச் செயல் படவும், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் அவர்கள்; மகிழ்ச்சியடை யவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா,

நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும், பிணியினாலும் பாதிக்கப்பட்டு கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் வாழ்வைத் தொட்டு நலம் தரும் ஆண்டவரே,

உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியைப் பின்பற்றி நாங்களும் ஒருவர் ஒருவரை அன்புடன் தொட்டு நலப்படுத்தவும், தீமை தரும் தொடுதல்களைத் தவிர்க்கவும், தொடுவதன் மூலம் தடைகளை உடைக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

இயங்கிவருகின்ற அன்பியங்கள் அனைத்தும் பிறர்நலனில் அக்கறைக்காட்டிடவும், பொருளாதார வசதியின்றி மருத்துவசிகிச்சை பெறாமல் வாழ்ந்துவருகின்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அவர்களின் அன்பை பிறர்க்கு எடுத்துக்காட்டி சாட்சிய வாழ்வு வாழ தேவையான அருளைத்தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியும் மீட்புமான தந்தையே இறைவா!

எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி, உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவராய் நலம் அளிக்கும் தந்தையே, எம் இறைவா!

நோய்களின் உருமாற்றத்தால் செய்வதறியாமல் தவிக்கும் எங்களைக் கண்ணோக்கும். சிறந்த மாற்றுமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஞானத்தையும், அறிவாற்றலையும் எம் மருத்துவர்களுக்குத் தந்து எம் நலம் காக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உறவுகளுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே!

நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப் பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

பரிவின் தொடுதல் !

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.

மன்றாட்டு:

எங்கள் வாழ்வைத் தொட்டு நலம் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியைப் பின்பற்றி நாங்களும் ஒருவர் ஒருவரை அன்புடன் தொட்டு நலப்படுத்தவும், தீமை தரும் தொடுதல்களைத் தவிர்க்கவும், தொடுவதன் மூலம் தடைகளை உடைக்கவும் அருளைத் தாரும். ஆமென்.